ADDED : டிச 28, 2025 11:26 PM

ஆர்சனல் அணி முதலிடம்
மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஆர்சல், பிரைட்டன் அணிகள் மோதின. இதில் ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என, நாட்டிங்காம் அணியை வென்றது. இதுவரை விளையாடிய 18 போட்டியில், 13 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி என 42 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் மான்செஸ்டர் சிட்டி (40 புள்ளி) உள்ளது.
மெல்போர்ன் அணி வெற்றி
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் 'பிக் பாஷ் லீக்' கிரிக்கெட் ('டி-20') தொடர் நடக்கிறது. கான்பெராவில் நடந்த லீக் போட்டியில் ஜோ கிளார்க் (60), மேக்ஸ்வெல் (39*) கைகொடுக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி (132/1, 14 ஓவர்), 9 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை (128/10, 20 ஓவர்) வீழ்த்தியது.
ஹியு மோரிஸ் காலமானார்
கார்டிப்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹியு மோரிஸ் 62. மூன்று டெஸ்டில் பங்கேற்ற இவர், 314 முதல் தரம் (19,785 ரன், 53 சதம், 98 அரைசதம்), 274 'லிஸ்ட் ஏ' (8606 ரன், 14 சதம், 49 அரைசதம்) போட்டிகளில் விளையாடினார். ஓய்வுக்கு பின் இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். குடல் கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர், நேற்று காலமானார்.
எக்ஸ்டிராஸ்
* ஆமதாபாத்தில் இன்று நடக்கவுள்ள விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. முதலிரண்டு போட்டியில் புதுச்சேரி அணியை வீழ்த்திய தமிழகம், மத்திய பிரதேசத்திடம் தோல்வியடைந்தது.
* ''புத்தாண்டு, இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு சிறப்பானதாக அமையும். உலக கோப்பை தகுதிச் சுற்று, ஆசிய விளையாட்டு போன்ற மிகப் பெரிய தொடர்கள் சவால் நிறைந்ததாக இருக்கும்,'' என, இந்திய வீராங்கனை தீபிகா தெரிவித்தார்.

