ADDED : ஜன 07, 2026 10:51 PM

காலிறுதியில் அல்ஜீரியா
ரபாத்: மொராக்கோவில், ஆப்ரிக்க கோப்பை கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. 'ரவுண்டு-16' போட்டியில் அல்ஜீரியா, காங்கோ அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. கூடுதல் நேரத்தில் அசத்திய அல்ஜீரிய அணிக்கு பவுல்பினா (119வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க 1-0 என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஐவரி கோஸ்ட் அணி 1-0 என புர்கினா பாசோ அணியை வென்றது.
அரையிறுதியில் அமெரிக்கா
பெர்த்: ஆஸ்திரேலியாவில், கலப்பு அணிகளுக்கான யுனைடெட் கோப்பை டென்னிஸ் 4வது சீசன் நடக்கிறது. காலிறுதியில் அமெரிக்கா (கோகோ காப், டெய்லர் பிரிட்ஸ், கிறிஸ்டியன் ஹாரிசன்), கிரீஸ் (மரியா சக்காரி, ஸ்டெபானஸ் சிட்சிபாஸ்) அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
கேப்டவுன் முதல் வெற்றி
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் நடந்த 'எஸ்.ஏ.20' லீக் போட்டி, மழையால் தலா 12 ஓவராக குறைக்கப்பட்டது. கேப்டன் டுபிளசி (44) கைகொடுக்க ஜோகனஸ்பர்க் அணி 12 ஓவரில் 123/7 ரன் எடுத்தது. 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றிக்கு 128 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. வான் டெர் துசென் (35 ரன், 24 பந்து, 3x6), பூரன் (33 ரன், 15 பந்து, 5x6) அதிரடி காட்ட, கேப்டவுன் அணி 11.2 ஓவரில் 128/6 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் இம்முறை முதல் வெற்றியை பதிவு செய்தது.
எக்ஸ்டிராஸ்
* டில்லியில், ஜன. 13-18ல் இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கவுள்ளது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதுகின்றனர். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, வியட்நாமின் துய் லின் நகுயெனை சந்திக்கிறார்.
* வதோதராவில் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் (டபிள்யு.டி.டி.,) 'பீடர் சீரிஸ்' தொடருக்கான கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் சர்தக் ஆர்யா, ஹர்தீ படேல் ஜோடி 3-2 (5-11, 11-9, 11-9, 9-11, 12-10) என, ஸ்னேஹித், சயாலி வாணி ஜோடியை வீழ்த்தியது.
* குஜராத்தின் ஆமதாபாத்தில் இன்று நடக்கவுள்ள விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கேரளா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி, இதுவரை விளையாடிய 6 போட்டியில், 2 வெற்றி, 4 தோல்வி என, 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. கேரளா அணி 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 2 தோல்வி) 2வது இடத்தில் உள்ளது.
* டில்லி, போபாலில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 31 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் என, 60 பதக்கம் கைப்பற்றிய ஹரியானா முதலிடம். அடுத்த இரு இடங்களை மகாராஷ்டிரா (24 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம்), ராஜஸ்தான் (15 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலம்) பிடித்தன. தமிழகத்துக்கு 6 தங்கம் கிடைத்தது.

