/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவில் உலக பாரா தடகளம்
/
இந்தியாவில் உலக பாரா தடகளம்
ADDED : டிச 20, 2024 11:05 PM

புதுடில்லி: உலகின் பெரிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி முதன் முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது.
மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலகின் பெரிய விளையாட்டு, பாரா தடகள உலக சாம்பியன்ஷிப். கடைசியாக ஜப்பானின் கோபேவில் நடந்த போட்டியில் 1000க்கும் அதிகமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கம் வென்று, முதன் முறையாக பட்டியலில் 6வது இடம் பிடித்தது. தமிழகத்தின் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்.
இதன் 12வது தொடர், முதன் முறையாக இந்திய மண்ணில் வரும் 2025, செப். 26 முதல் அக். 5 வரை, டில்லி நேரு மைதானத்தில் நடக்க உள்ளது. தவிர 2025, மார்ச் 11-13ல் டில்லியில் முதன் முறையாக உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியும் நடக்க உள்ளது. இது பாரா உலக சாம்பியன்ஷிப்பிற்கு முன்னோட்டமாக அமையும்.
இந்தியாவின் தேசிய பாராலிம்பிக் கமிட்டி வெளியிட்ட செய்தியில்,' உலக விளையாட்டின் வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது. இதன் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது பாரா உலக தடகள சாம்பியன்ஷிப். 2036ல் ஒலிம்பிக், பாராலிம்பிக் நடத்த திட்டமிட்டுள்ள இந்தியாவின் கோரிக்கைக்கு இப்போட்டி உதவியாக அமையும்,' என தெரிவித்துள்ளது.
ஆசியாவில் எத்தனை
பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் ஆசியாவில் 2015ல் தோஹா, 2019ல் துபாய், 2024ல் கோபேவில் நடந்தன. தற்போது நான்காவது முறையாக இந்தியாவின் டில்லியில் நடக்க உள்ளது.