/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிம்ரன், நிஷாத் 'தங்கம்' * உலக பாரா தடகளத்தில் கலக்கல்
/
சிம்ரன், நிஷாத் 'தங்கம்' * உலக பாரா தடகளத்தில் கலக்கல்
சிம்ரன், நிஷாத் 'தங்கம்' * உலக பாரா தடகளத்தில் கலக்கல்
சிம்ரன், நிஷாத் 'தங்கம்' * உலக பாரா தடகளத்தில் கலக்கல்
ADDED : அக் 03, 2025 10:55 PM

புதுடில்லி: உலக பாரா தடகளத்தில் இந்தியாவின் சிம்ரன், நிஷாத் குமார் தங்கம் கைப்பற்றினர்.
டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி 12, பார்வைக் குறைபாடு) அரையிறுதி நடந்தது. இந்தியாவின் சிம்ரன் சர்மா 12.08 வினாடியில் கடந்து, முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
அடுத்து நடந்த பைனலில் 11.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது இவரது சிறந்த ஓட்டமாக அமைந்தது. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சிம்ரன் வென்ற இரண்டாவது தங்கம் (2024, 2025) இது.
நிஷாத் கலக்கல்
ஆண்களுக்கான உயரம் தாண்டுலில் (டி 47, வலது கை பாதிப்பு) இந்தியாவின் நிஷாத் குமார், ராம் பால் பங்கேற்றனர். அதிகபட்சம் 2.14 மீ., உயரம் தாண்டிய நிஷாத் குமார், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ராம் பால் (1.94) 5வது இடம் பிடித்தார்.
பிரீத்தி வெண்கலம்
பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் (டி 35) பைனல் நடந்தது. இந்தியாவின் பிரீத்தி பால், 30.03 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். 0.03 வினாடியில் முந்திய ஈராக்கின் பாத்திமா (30.00) வெள்ளி, சீனாவின் குயன்குயன் (29.50) தங்கம் வென்றனர்.
ஆண்களுக்கான வட்டு எறிதல் (எப் 64) போட்டியில் இந்திய வீரர் பர்தீப் குமார், 4வது வாய்ப்பில் அதிகபட்சம் 46.63 மீ., துாரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் ஷரவன் குமார் (44.11) 5வது இடம் பெற்றார்.
நான்காவது இடம்
உலக பாரா தடகளத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது. இதுவரை இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கம் வென்று, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. முதல் மூன்று இடத்தில் பிரேசில் (12 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம், மொத்தம் 37), சீனா (9+16+13=38), போலந்து (8+2+5=15) அணிகள் உள்ளன
ஜப்பான் வீராங்கனைக்கு நாய்க்கடி
உலக தடகளம் நடக்கும் நேரு மைதானத்தில் நாய் தொல்லை பெரும் சிக்கலாக உள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில்,' நேற்று காலை வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஜப்பான் வீல்சேர் வீராங்கனை மியகோ மட்சுமோட்டோ, கென்ய தடகள பயிற்சியாளர் டெனிஸ், பாதுகாவலர் ஒருவர் என மூன்று பேரையும், 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று நாய்கள் கடித்தன. ஏற்கனவே இரண்டு இந்தியர்களை நாய் கடித்துள்ளன. உலக தடகளம் துவங்கியது முதல் 5வது முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளன,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்ய பிரதிநிதி கூறுகையில்,'' நாய் கடித்ததில் பயிற்சியாளர் காலில் ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை தரப்பட்டது,'' என்றார்.