ADDED : நவ 28, 2026 02:17 AM

புவனேஸ்வர்: யூத் தடகளத்தில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.
கிழக்கு, தென்கிழக்கு நாடுகளுக்கு (இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், தாய்லாந்து, மியான்மர்) இடையிலான யூத் (23 வயதுக்கு உட்பட்ட) தடகள சாம்பியன்ஷிப், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.
மூன்றாவது, கடைசிநாளில் நேற்று இந்தியா பதக்க வேட்டை தொடர்ந்தது. பெண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் ஆயிஷா, டகுரா, பிரவலிகா, தானு இடம் பெற்ற இந்தியா ‘பி’ அணி (3:39.97 நிமிடம்) தங்கப்பதக்கம் வென்றது. இலங்கை (3:41.16), வங்கதேச (3:56.60) அணிகள் அடுத்த இரு இடம் பெற்றன. ஆண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியா ‘பி’ அணி (3:09.47) தங்கம் கைப்பற்றியது.
பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷீபா (6.21 மீ.,) தங்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஷஷாங்க் பாட்டீல் (71.89 மீ.,), 800 மீ., ஓட்டத்தில் ஷ்யாம் மிலன் (1:50.66 நிமிடம்) தங்கம் கைப்பற்றினர்.
ஒட்டு மொத்தமாக 22 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என 47 பதக்கம் வென்று, பட்டியலில் முதலிடம் பிடித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இலங்கை (10+12+16=38), வங்கதேசம் (0+2+8=10) அடுத்த இரு இடம் பெற்றன.
