/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பைனலில் அல்காரஸ் - சின்னர்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
/
பைனலில் அல்காரஸ் - சின்னர்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
பைனலில் அல்காரஸ் - சின்னர்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
பைனலில் அல்காரஸ் - சின்னர்: விம்பிள்டன் டென்னிசில் மோதல்
UPDATED : ஜூலை 11, 2025 11:34 PM
ADDED : ஜூலை 11, 2025 10:24 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் சின்னர் முன்னேறினர்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை 5-7 என போராடி இழந்தார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 3வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். 'டை பிரேக்கர்' வரை சென்ற 4வது செட்டில் மீண்டும் அசத்திய அல்காரஸ் 7-6 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 49 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 6-4, 5-7, 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) பைனலுக்குள் நுழைந்தார். இதில் 2023, 2024ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
சின்னர் வெற்றி: மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், விம்பிள்டனில் 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர். இதில் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன் 2023ல் அரையிறுதி வரை சென்றிருந்தார்.
சச்சின் வருகை
விம்பிள்டன் போட்டிகளை நேரில் காண, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தனது மனைவி அஞ்சலியுடன் வந்தார்.
முதல் கோப்பை
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று அமெரிக்காவின் அனிசிமோவா, போலந்தின் ஸ்வியாடெக் மோதுகின்றனர். இருவரும் முதன்முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினர். இன்று வெற்றி பெறும் வீராங்கனை விம்பிள்டனில் முதல் கோப்பை வெல்லாம். இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 8வது ஆண்டாக பெண்கள் ஒற்றையரில் புதிய சாம்பியன் கிடைக்க உள்ளார்.
இதற்கு முன் ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா (2017), ஜெர்மனியின் கெர்பர் (2018), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (2019), ஆஸ்திரேலியாவின் ஆஷ் பார்டி (2021), கஜகஸ்தானின் எலினா ரிபாகினா (2022), செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரூசோவா (2023), பார்போரா கிரெஜ்சிகோவா (2024) விம்பிள்டனில் முதன்முறையாக கோப்பை வென்றிருந்தனர்.