ADDED : நவ 16, 2026 09:40 PM

* ஹாங்காங்கில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் லக்சயா சென், ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அஷ்மிதா, அன்மோல் கார்ப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சமீபத்தில் ஹைலோ ஓபன், ஜப்பான் மாஸ்டர்ஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற லக்சயா சென், அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில், ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடருக்கு தகுதி பெறலாம்.
* அனைத்து இந்திய டென்னிஸ் சங்க (ஏ.ஐ.டி.ஏ.,) துணை தலைவர் பதவிக்கு, முன்னாள் வீரர் லியாண்டர் பயஸ் 53, போட்டியிடுகிறார். கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் 18 பட்டம் வென்றுள்ள இவர், அட்லாண்டா ஒலிம்பிக் (1996) ஒற்றையரில் வெண்கலம் வென்றிருந்தார்.
* மும்பையில் நடந்த இந்தியன் ஸ்டிரீட் பிரிமியர் லீக் கிரிக்கெட் (‘டி–10’ டென்னிஸ் பந்து) 5வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், முதல் முறையாக ரூ. 10.40 கோடிக்கு மேல் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் ஆமதாபாத் அணி, அதிகபட்சமாக ரூ. 28.66 லட்சத்திற்கு சரோஜ் பரமாணிக்கை வாங்கியது.
* அசாமின் கவுகாத்தியில் ஜூனியர் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் பத்மபிரியா 6–1, 6–1 என, சகவீராங்கனை ரிதுவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சவிதா 5–7, 7–5, 6–1 என, சகநாட்டை சேர்ந்த குரேஷி ஜோகாவை வென்றார்.
