ADDED : ஏப் 25, 2026 07:52 PM

மாட்ரிட்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக ஸ்பெயினின் அல்காரஸ் விலகினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், வரும் மே 18ல் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் துவங்குகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இருந்து 'நடப்பு சாம்பியன்' (2024, 2025) ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, வலது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகினார். உலகின் 'நம்பர்-2' வீரரான அல்காரஸ், சமீபத்தில் முடிந்த பார்சிலோனா ஓபன் தொடரின் முதல் சுற்றில் காயமடைந்தார். ஏற்கனவே இவர், ஸ்பெயினில் நடக்கும் மாட்ரிட் ஓபன், ரோமில் நடக்கவுள்ள இத்தாலி ஓபனில் (மே 5-17) இருந்து விலகினார்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், கத்தார் ஓபனில் கோப்பை வென்ற அல்காரஸ், சமீபத்தில் 'லாரஸ்' உலக விளையாட்டு விருது வென்றிருந்தார்.
இதுகுறித்து அல்காரஸ் வெளியிட்ட செய்தியில், 'மருத்துவ பரிசோதனையின் முடிவின் படி, இத்தாலி, பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுகிறேன். காயத்தில் இருந்து மீண்டு, வலிமையுடன் போட்டிக்கு திரும்புவேன்,'' என்றார்.
