ADDED : பிப் 21, 2024 10:46 PM

புனே: சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சசிக்குமார் முன்னேறினார்.
இந்தியாவின் புனேயில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், பிரிட்டனின் கில்லை எதிர்கொண்டார். இதில் சசிக்குமார் 6-1, 6-0 என எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரேலியாவின் வால்டனை சந்திக்கவுள்ளார்.
இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், அர்ஜுன் ஜோடி, சக இந்தியாவின் ரித்விக், கலியாண்டா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ஜீவன் ஜோடி 6-3 என கைப்பற்றிய அடுத்த செட்டை 6-3 என வசப்படுத்தியது.
முடிவில் இந்திய ஜோடி 6-3, 6-3 என நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி, ஆஸ்திரேலியாவின் மாத்யூ, போலந்தின் பியாட்டர் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்று 7-6 என இந்திய ஜோடி கைப்பற்றியது.
அடுத்த செட்டையும் 6-4 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

