ADDED : நவ 15, 2025 11:15 PM

பெங்களூரு: பில்லி ஜீன் கிங் கோப்பை தொடரின் முதல் இரு போட்டியில் இந்தியாவின் ராஷ்மிகா, சஹாஜா தோல்வியடைந்தனர்.
பெங்களூருவில், பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 'பிளே-ஆப்' சுற்றில் இந்திய பெண்கள் அணி 'ஜி' பிரிவில் நெதர்லாந்து, சுலோவேனியாவுடன் இடம் பெற்றுள்ளது. இதில் முதலிடம் பிடிக்கும் அணி, 'பைனல்' சுற்றுக்கு முன்னேறும். நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, சுலோவேனிய அணிகள் மோதின.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தமரா ஜிடன்செக்கை சந்தித்தார். முதல் செட்டை இழந்த (3-6) ராஷ்மிகா, அடுத்த செட்டை 6-4 என வென்றார். 3வது செட்டை 1-6 என கோட்டை விட்டார். முடிவில் ராஷ்மிகா 3-6, 6-4, 1-6 என வீழ்ந்தார்.
இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சஹாஜா, காஜா யுவன் மோதினர். இதில் சஹாஜா, 4-6, 2-6 என்ற நேர் செட்டில் தோற்றார். இந்தியா 0-2 என பின்தங்கியது.

