/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.27 கோடியில் உருவாகிறது புது கட்டடம்
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.27 கோடியில் உருவாகிறது புது கட்டடம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.27 கோடியில் உருவாகிறது புது கட்டடம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.27 கோடியில் உருவாகிறது புது கட்டடம்
ADDED : ஆக 22, 2024 12:41 AM

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகப் பகுதியாக, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி விளங்குகிறது. திருக்கழுக்குன்றம் தாலுகா, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமையிடமாக, இவ்வூர் உள்ளது.
இதுமட்டுமின்றி, சார் - பதிவாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை உள்ளிட்ட பிற அரசு அலுவலகங்களும் இயங்குகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
திருக்கழுக்குன்றம், ருத்திரான்கோவில், முத்திகைநல்லான்குப்பம், மங்கலம், நாவலுார் ஆகிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 18 வார்டு பகுதிகள் உள்ளன. இப்பகுதியின் மக்கள்தொகை, 2011 கணக்கெடுப்பின்படி, 30,000 பேர். தற்போது, 35,000 பேராக அதிகரித்துள்ளனர்.
குறுகிய அறைகள்
இப்பேரூராட்சியின் நிர்வாக அலுவலகம், பழமையான கட்டடத்தில் இயங்குகிறது. கடந்த 1970ல், அன்றைய கால தேவைக்கேற்ப, இக்கட்டடம் சிறியதாக கட்டப்பட்டது.
அதன் கீழ்தளத்தில் செயல் அலுவலர், பிற ஊழியர்களுக்கு குறுகிய அறைகளே உள்ளன. மேல்தளத்தில் மன்ற கூடமும் மிக குறுகியதாகவே உள்ளது.
அலுவலர், ஊழியர்கள் கடும் இடநெருக்கடியில் பணிபுரிகின்றனர். மன்ற கூட்டம் நடத்த விசாலமான அரங்கம் இன்றி, வார்டு உறுப்பினர்கள், நெருக்கியடித்து அமர்ந்து அவதிப்படுகின்றனர்.
மேலும், சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை, ஆன்லைன் வாயிலாக செலுத்த வசதி இருந்தும், பெரும்பாலானோர் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற அலுவலகத்திற்கே செல்கின்றனர். அங்கு, பொதுமக்கள் காத்திருக்கவும் இடவசதி இல்லை.
இது ஒருபுறமிருக்க, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம், தற்போது பலமிழந்துள்ளது. சுவர் விரிசலடைந்து, மழைநீர் உட்புகுந்து மேலும் பாழடைகிறது. பதிவேடுகளை முறையாக பாதுகாக்க இயலவில்லை.
தற்கால தேவையின் அவசியம் கருதி, புதிய கட்டடம் கட்ட, மன்றத்தினர் வலியுறுத்தியது குறித்து, கடந்த ஆண்டு, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்ட, தற்போதைய அலுவலக பகுதியில் போதுமான இடவசதி இன்றி, குறுகியதாக உள்ளது.
எனவே, அப்பகுதியை தவிர்த்து, அங்கிருந்து 200 மீ., தொலைவில், பழைய வளம் மீட்பு பூங்கா பகுதியில் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. பின், மண்ணின் தன்மை குறித்து பரிசோதிக்கப்பட்டது.
அங்கு கட்டடம் கட்ட, 2024 - 25 மூலதன மானிய திட்டத்தில், 1.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட உள்ளன.
ஒப்பந்தம்
புதிய கட்டடத்தின் கீழ்தளம், 1,797 ச.அடி., பரப்பில் அமைகிறது. அதில், முகப்பு வாயிற்கூடம், செயல் அலுவலர், கணினி, பதிவேடு ஆகிய தனித்தனி அறைகள், இரண்டு அலுவலக கூடங்கள், கழிப்பறைகள் என இடம்பெறுகின்றன.
கட்டட மேல்தளம், 1,443 ச.அடி., பரப்பில் அமைகிறது. அதில், பேரூராட்சி தலைவர் அறை, கூட்டரங்கம், பொறியாளர் அறை, காத்திருப்போர் கூடம் ஆகியவை இடம்பெறுகின்றன.
இதுகுறித்து, பேரூராட்சி தலைவர் யுவராஜ் கூறியதாவது:
பேரூராட்சி அலுவலகத்தில் போதிய இடமில்லை. புதிய அலுவலக கட்டடம், 1.27 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட, ஒப்பந்தம் அளித்துள்ளோம். கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.