/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை விழா கோலாகலம்
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை விழா கோலாகலம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை விழா கோலாகலம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை விழா கோலாகலம்
ADDED : ஆக 27, 2024 01:05 AM

திருப்போரூர் : திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆவணி மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விடுமுறை நாளான நேற்று கிருத்திகை வந்ததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முடி காணிக்கை செலுத்தி, சரவணப் பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாட வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. திருப்போரூர் போலீசார், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்போரூர் கிரிவல சாலையில் உள்ள ராதா கிருஷ்ணர், மேட்டுக்குப்பம் யோக ஆஞ்சநேயர், இடர்குன்றம் லட்சுமி நரசிம்மர், நெல்லிகுப்பம் வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணரை அலங்கரித்து வழிபாடு, பூஜை நடந்தது. கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.
அதேபோல், கன்னியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 6:00 மணிக்கு உறியடி திருவிழாவும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.