/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்நிலை தொட்டியில் வளரும் ஆலமர கன்று
/
மேல்நிலை தொட்டியில் வளரும் ஆலமர கன்று
ADDED : மே 02, 2024 01:34 AM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு, 21வது வார்டுக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலைத் தேக்கத் தொட்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. மேலும், மேல்நிலைத் தேக்கத் தொட்டியின் பக்கவாட்டில் ஆலமரக்கன்று வளர்வதால், தொட்டியில் விரிசல் அடைந்து, நாளடைவில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலைத் தேக்கத் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

