/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல்?
/
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல்?
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல்?
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல்?
ADDED : மார் 14, 2025 10:52 PM
திருப்போரூர்:திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
விழாவில் தினமும், கந்த பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுவாமியை உள்ளிருந்து வெளியில் சுமந்து வரவும், உள் பிரகாரத்தை சுற்றி வரவும், வாகனத்தில் இருந்து இறக்கவும், ஸ்ரீபாதம் தாங்கிகள் இப்பணியை செய்து வருகின்றனர்.
இதில், வட வண்ட கோடி, சந்துதெரு, அய்யம்பேட்டை தெரு, தண்டலம் உள்ளிட்ட நான்கு கோடிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட, நுாறுக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இவர்களுக்கு கோவில் சார்பில், ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியத்தை அனைவரும் சமமாக பிரித்துக் கொள்வர். சில உற்சவத்துக்கு விருப்பமுள்ள பொதுமக்களிடமும் ஊதியம் வசூலிப்பர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பதினோராம் நாள் உற்சவமாக கிரிவலம் மற்றும் பந்தம்பரி உற்சவம் நடைபெற்றது. இதில் கந்தப்பெருமான் தெற்கு மாட வீதி அய்யம்பேட்டை தெரு கிரிவலப் பாதை, வடக்கு மாட வீதி வழியாக சென்று, இரவு 10:00 மணியளவில் கோவிலை வந்தடைந்தார்.
அப்போது ஒரு குறிப்பிட்ட கோடியைச் சேர்ந்த ஸ்ரீபாதம் தாங்கிகள் சிலர், கோவில் 16 கால் மண்டபம் அருகே தகராறில் ஈடுபட்டனர்.
பின், தகராறு அதிகரித்து கோவில் உள்ளே சென்று, அங்கேயும் மோதிக்கொண்டனர்.
இந்த தகராறு குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் கோவிலில் குவிந்து, கத்தி மற்றும் கம்புகளால் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, அவர்கள் தப்பி உள்ளனர்.
இந்த மோதலில், சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு பொதுமக்களிடம் வசூலித்த ஊதியத்தை பிரிப்பதில் ஏற்பட்டதா அல்லது முன்விரோதம் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், ஸ்ரீ பாதம் தாங்கிகள் என்ற போர்வையில், வெளிநபர்கள் இதில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், திருப்போரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில்,'மேற்கண்ட பிரச்னை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இனிமேல் சுவாமியை சுமந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்' எனக் கூறப்பட்டுள்ளது.