/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டி - பஸ் மோதல் கல்லுாரி மாணவி பலி
/
ஸ்கூட்டி - பஸ் மோதல் கல்லுாரி மாணவி பலி
ADDED : செப் 12, 2024 01:30 AM
திருப்போரூர்:-திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த சந்துரு மகள் ஷாலினி, 20. இவர், வண்டலுார், ரத்தினமங்கலம் தனியார் மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்.சி., கார்டியோ டெக்னாலஜி படித்து வந்தார்.
நேற்று காலை 9:30 மணிக்கு, தன்னுடன் படிக்கும் ஸ்வேதா, 20, என்பவருடன், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில், கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலையில், கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார். ஷாலினி, பைக்கை ஓட்டினார்.
அப்போது, கீழக்கோட்டையூர் அருகே, பின்னால் வந்த அரசு மாநகரப் பேருந்து, ஷாலினி சென்ற பைக் மீது மோதியது. இதில், ஷாலினி வலது புறம் கீழே விழுந்தபோது, பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்து வந்த ஸ்வேதா, இடதுபுறம் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஷாலினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த ஸ்வேதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.