/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழிப்பாந்தண்டலம் மயான விவகாரம் அங்கீகாரம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
/
குழிப்பாந்தண்டலம் மயான விவகாரம் அங்கீகாரம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
குழிப்பாந்தண்டலம் மயான விவகாரம் அங்கீகாரம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
குழிப்பாந்தண்டலம் மயான விவகாரம் அங்கீகாரம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 10, 2024 10:27 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலத்தில், மயான பாதையை ஒட்டி, தனியார் இடம் உள்ளது. இப்பாதையின் குறிப்பிட்ட பகுதி, தனக்கு சொந்தமானதாக கூறி, கடந்த 2019ல், அப்பகுதியை மறித்து, சுற்றுச்சுவர் அமைக்க முயன்றார்.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள், தனி நபர் இடையே மோதல் ஏற்பட்டது. வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வின்றி சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், சர்ச்சை பகுதியில், தனி நபர் சுற்றுச்சுவர் கட்டினார். ஆனால், அந்த சுற்றுச்சுவர் மர்மமாக இடிக்கப்பட்டதால், மீண்டும் கட்டினார்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, அப்பகுதிவாசிகள் பல போராட்டங்கள் நடத்தினர். இறந்தவர்களை மயானத்தில் எரியூட்ட இயலாமல், வேறிடத்தில் எரியூட்டினர்.
சுற்றுச்சுவர் கட்டியுள்ள குறிப்பிட்ட பகுதியில், பிறர் செல்லக்கூடாது என, தனியார் தடையுத்தரவு பெற்றதால், எச்சூர் அல்லது ஆண்டிகுப்பம் பகுதி வழியே, இறந்தவர் உடலை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
நாளடைவில், திருக்கழுக்குன்றம் சாலையை ஒட்டி, கால்நடை மருந்தகம் அருகில், புதிய மயான வளாகம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு இறந்தோரின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன.
இதற்கிடையே, பழைய மயானத்தை பயன்படுத்துவது தொடர்பாக, அப்பகுதி மக்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு முடிவில், புதிய மயானத்திற்கு முறையான உரிம அங்கீகாரம் வழங்கி, அதையே தொடர்ந்து பயன்படுத்தலாம் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினருடன், நேற்று முன்தினம் அங்கு ஆய்வு செய்துள்ளார்.
இது குறித்து, வருவாய்த் துறையினர் கூறியதாவது:
புதிய மயானத்திற்கு உரிம அங்கீகாரம் வழங்கி பயன்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களோ, பழைய மயானத்தை பயன்படுத்தவும், பாதைக்காக தனியாரிடம் அனுமதி பெற்றுத் தரவும், எங்களிடம் வலியுறுத்துகின்றனர்.
இவ்விவகாரம் குறித்து, உயரதிகாரிகள் முடிவெடுப்பர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.