/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காசிமேடில் 4வது வாரமாக பெரிய மீன்கள் வரத்து 'டல்'
/
காசிமேடில் 4வது வாரமாக பெரிய மீன்கள் வரத்து 'டல்'
ADDED : ஜூலை 07, 2024 11:19 PM

காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து, நான்காவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.
சின்ன சங்கரா, தும்பிலி, நெத்திலி, மத்தி உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து அதிகம் இருந்தன. வஞ்சிரம், பாறை, கொடுவா, பர்லா உள்ளிட்ட பெரிய மீன்கள் வரத்து மிகக்குறைவாக உள்ளன.
நேற்று அதிகாலை 2:00 மணி முதல் காசிமேடில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். சிறிய மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
சிறிய மீன்களை 100 ரூபாய்க்கு கூவி, கூவி விற்றும், வாங்க ஆளில்லாத நிலையே இருந்தது. இதனால், மீன் வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
விசைப்படகு உரிமையாளர் கூறியதாவது:
நான் 45 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் இருக்கிறேன். எந்த பருவத்தில் எந்தெந்த மீன்கள் கிடைக்கும் என, எளிதில் கணக்கிடுவோம்.
ஆனால், நடப்பாண்டு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலம் முடிந்து, பெரிய மீன்களின் வரத்தே அதிகம் இருக்கும்.
கடந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் முடிந்து, பெரிய வகை மீன்களாக செருப்பு மீன்களை டன் கணக்கில் பிடித்தோம். இந்தாண்டு பெரிய மீன்கள் கடலில் கிடைக்கவில்லை.
சென்னை - ஆந்திரா கடற்கரை நிலவரத்தை கணிக்க முடியவில்லை. வரும் வாரங்களில் பெரிய மீன் வகைகள் கிடைக்குமா எனவும் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.