/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்! காயார் ஏரி மதகு சீரமைப்பது எப்போது?
/
வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்! காயார் ஏரி மதகு சீரமைப்பது எப்போது?
வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்! காயார் ஏரி மதகு சீரமைப்பது எப்போது?
வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்! காயார் ஏரி மதகு சீரமைப்பது எப்போது?
ADDED : மே 13, 2024 03:32 AM

திருப்போரூ : திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காயார் கிராமம். இக்கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி, நீர்வளத்துறை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில், 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. சுற்று வட்டார பகுதிகளின் நிலத்தடி நீராதாரமாகவும், இந்த ஏரி உள்ளது. இதில், நான்கு, மதகுகள், இரண்டு கலங்கல், 2,945 மீட்டர் நீளம் கரைப்பகுதிகள் உள்ளன.
ஏரியின் மதகு, கலங்கல், ஏரிக்கரைப் பகுதியை பலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
1.87 கோடி ரூபாய்
கோரிக்கையையடுத்து, ஆர்.ஆர்.ஆர்., திட்டத்தின் கீழ், 1.87 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு மதகு, இரண்டு கலங்கல் பகுதியை புதிதாக கட்டவும், ஒரு மதகை புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் ஏரியின் மதகு, கலங்கல், கரைப்பகுதிகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஒரு மதகு, ஒரு கலங்கல், கரைப்பகுதிகள் உட்பட சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முடிக்கப்பட்டன.
ஆனால், மற்ற பணிகளான ஒரு மதகு, ஒரு கலங்கல், 600 மீட்டர் ஏரி கரைப்பகுதிகள் மட்டும் வனப்பகுதி எல்லையில் வருகின்றன.
இதனால், அதற்கான வனத்துறை அனுமதி கிடைக்காததால், மேற்கொண்டு பணிகளை தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வனத்துறை அனுமதி கேட்டு, நீர்வளத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், அதற்கான அனுமதி கிடைத்தபாடில்லை.
சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பயன்படுத்தப்படாமல் உள்ளது, அதனால், அந்த நிதியை திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளது. அதனால், விவசாய பணிகளில் பாதிப்பு ஏற்படும் என, விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடனே ஏரி சீரமைப்பு பணிகளை துவக்கி, மழைகாலம் துவங்குவதற்கு முன் பணிகளை முடிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோரிக்கை
இது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தினர் நீர்வளத்துறையிடம் மனு அளித்து வருகின்றனர். அதேபோல், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்திலும், தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியபோது:
காயார் ஏரியில், ஒரு மதகு, கலங்கள், கரைப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பணிகளை முடிக்க வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
காலதாமதம் ஏற்படுவது குறித்து, வேளச்சேரி வனத்துறை தலைமை அலுவலகத்தில் கேட்டால், அதற்கான ஆவணம், மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்கின்றனர்.
மாவட்ட அலுவலகத்தில் கேட்டால், இன்னும் அது தொடர்பான ஆவணம் வரவில்லை என்கின்றனர். வனத்துறையிடமிருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே, விடுபட்ட ஏரி சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்ன காரணம்?
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனத்துறை அனுமதி சார்ந்து, முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் அனுமதி கிடைத்துவிடும்.
வனச்சரக அலுவலகம், மாவட்ட, மண்டல, தலைமை அலுவலகம் என, துறை சார்ந்து அனுமதி ஆவணம் குறித்து விசாரிக்கப்படும்.
உயர் அதிகாரிகள் தான் அனுமதி சார்ந்து முடிவெடுக்க முடியும். துறை சார்ந்து, எந்த அலுவலகத்தில் அனுமதி சார்ந்த ஆவணம் தடைபட்டு உள்ளது.
என்ன காரணம் என அறிந்து, அவற்றை நீர்வளத்துறை அதிகாரிகள் முறையிட்டு சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.