/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உரம், பூச்சிக்கொல்லி மருந்து தட்டுப்பாடு கூடுதல் விலையாலும் விவசாயிகள் வேதனை
/
உரம், பூச்சிக்கொல்லி மருந்து தட்டுப்பாடு கூடுதல் விலையாலும் விவசாயிகள் வேதனை
உரம், பூச்சிக்கொல்லி மருந்து தட்டுப்பாடு கூடுதல் விலையாலும் விவசாயிகள் வேதனை
உரம், பூச்சிக்கொல்லி மருந்து தட்டுப்பாடு கூடுதல் விலையாலும் விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 25, 2025 11:56 PM

மறைமலைநகர், செங்கல்பட்டு புறநகர் பகுதி காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், தோட்டக்கலை பயிர்களை ஆர்வமாக பயிரிடும் விவசாயிகள், உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறை மற்றும் உரிய விலையில் கிடைக்காததால் அவதிப்படுகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்லம், செட்டிபுண்ணியம், வடகால், வில்லியம்பாக்கம், ஆத்துார் குமிழி உள்ளிட்ட கிராமங்களில், விவசாயம் பிரதான தொழில்.
ஆடி பட்டம், கார்த்திகை பட்டம், சித்திரை சொர்ணவாரி ஆகிய மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு பட்டங்களாக குறைந்து உள்ளது.
தற்போது கார்த்திகை பட்டத்தில் நெல் பயிர் மட்டுமின்றி, நிலக்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, புடலை, சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிடுவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறை மற்றும் உரிய விலையில் கிடைக்காததால் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஏரி பாசனம், கிணறு பாசனம் வாயிலாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிணற்று பாசன வசதி உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்து செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
நெல், நிலக்கடலை போன்றவை 90 நாட்களுக்குப் பிறகே மகசூல் கிடைக்கும். ஆனால் காய்கறி பயிர்கள் 50 முதல் 60 நாட்களிலேயே மகசூல் கிடைக்க துவங்கிவிடும்.
சமீப காலமாக காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளதுடன், தரமற்ற நிலையிலும் உள்ளன. அத்துடன், 'பாக்டம்பாஸ் 20 -20' மருந்து முறையாக கிடைக்காமல் சாலவாக்கம், திருப்போரூர், கரும்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வாங்கி வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
அத்துடன் இந்த மருந்துகள், தனியார் மருந்து கடைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. உர மூட்டைகளில் உள்ள 'எம்.ஆர்.பி.,' விலையை விட, கூடுதலான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கேட்டால், மருந்து இல்லை என தனியார் கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால், வேறு பகுதிக்குச் சென்று மருந்து வாங்கும் நிலை ஏற்படுகிறது.இதன் காரணமாக, போக்குவரத்திற்கு கூடுதல் செலவும் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புறநகரில் பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் கிடைக்காததால், திருப்போரூர் சென்று உரங்களை மொத்தமாக வாங்கி வரும் நிலை உள்ளது. மேலும் சென்னேரி, திருவடிசூலம் உள்ளிட்ட கிராமங்களில் மயில்களும், திருக்கச்சூர், கொளத்துார் போன்ற பகுதிகளில் நத்தையும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாரியப்பன், காட்டாங்கொளத்துார்.

