/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் கடற்கரை மேம்பாட்டு திட்டம்... தாமதம்! நடைபாதை கடைகளால் இயற்கை சூழல் சீரழிவு
/
மாமல்லபுரம் கடற்கரை மேம்பாட்டு திட்டம்... தாமதம்! நடைபாதை கடைகளால் இயற்கை சூழல் சீரழிவு
மாமல்லபுரம் கடற்கரை மேம்பாட்டு திட்டம்... தாமதம்! நடைபாதை கடைகளால் இயற்கை சூழல் சீரழிவு
மாமல்லபுரம் கடற்கரை மேம்பாட்டு திட்டம்... தாமதம்! நடைபாதை கடைகளால் இயற்கை சூழல் சீரழிவு
ADDED : பிப் 24, 2025 11:34 PM

மாமல்லபுரம் மாமல்லபுரத்தில், பாரம்பரிய சின்னமான கடற்கரை கோவில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில், நடைபாதை கடைகள் அதிகரித்து வருகின்றன. இயற்கைச்சூழல் கொண்ட கடற்கரையில் நடைபாதை கடைகள் உள்ளதால், சுற்றுலா பயணியர் முகம்சுளிக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பாறைக் குன்றுகளில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு பல்லவர்கள், கலைச் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த சிறப்பு வாய்ந்த சிற்பங்களால், மாமல்லபுரம் சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கடற்கரை கோவில், ஐக்கிய நாடுகள் சபை கலாசார அமைப்பின் அங்கீகாரம் பெற்றது.
இப்பகுதி கடற்கரை, பாரம்பரிய கற்கோவிலுடன் மிளிர்ந்து, சுற்றுலா பயணியரை கவர்கிறது.
சுற்றுலா பயணியர் சிற்பங்களைக் கண்டு ரசித்து, கடற்கரையில் முகாமிடுகின்றனர். மணல்வெளியில் உலவி, அலையில் விளையாடி, துாய காற்றை நுகர்ந்து இளைப்பாறுகின்றனர்.
இத்தகைய இயற்கைச்சூழல் கொண்ட கடற் கரையை, துாய்மையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், சுற்றுலா பயணியர் குறைவு.
கடற்கரையிலும் நடைபாதை கடைகள் இல்லை. நாளடைவில் சுற்றுலா மேம்பட்டு, தற்போது பயணியர் அதிக அளவில் திரள்கின்றனர்.
குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், ஒருநாள் சுற்றுலாவாக மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.
கடற்கரையிலும் பயணியர் குவிவதால், அவர்களிடம் வியாபாரம் செய்ய கருதி, பல ஆண்டுகளுக்கு முன், சில நடைபாதை கடைகள் வைக்கப்பட்டன.
தற்போது கைவினைப் பொருட்கள், தின்பண்டங்கள், தேநீர், குளிர்பானம், மீன் வறுவல், இளநீர் விற்பனை கடைகள் என, நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள், கடற்கரையை ஆக்கிரமித்து பெருகியுள்ளன.
மேலும் பலுான் சுடுதல், பொருட்கள் மீது ரப்பர் வளையம் வீசுதல், ராட்டினம் உள்ளிட்டவையும் அதிகரித்து உள்ளன.
சவாரிக்காக, குதிரைகளும் அதிகரித்து உள்ளன.
இந்நிலையில் கடைகளின் குப்பை, வெடித்த பலுான் குப்பை, மீன் கழிவுகள் ஆகியவை கடற்கரையில் குவிக்கப் படுகின்றன. குதிரைகளின் சாணமும் அதிகரித்து, கடற்கரை இயற்கை சுற்றுச்சூழல் மாசடைந்து சீரழிகிறது.
ராட்டினம் உள்ளிட்டவற்றுக்கு டீசல் மோட்டார் இயக்கி, அவை வெளியிடும் கரும்புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது.
இதனால், சுற்றுலா பயணியர் கடற்கரையில் உலவவும், இளைப்பாறவும் துாய்மையான இடமில்லை.
சுற்றுலா பகுதி கடற்கரையே அலங்கோலமாக மாறி, பயணியர் முகம் சுளிக்கின்றனர்.
பாரம்பரிய சின்னமான கடற்கரை கோவில் பகுதி கடற்கரையை துாய்மையாகவும், ஆக்கிரமிப்பு இல்லாமலும் பராமரிக்க வேண்டிய நிலையில், சுற்றுப்புறத்திலிருந்து கோவிலையே காண முடியாதபடி, கடைகள் மறைத்து உள்ளன.
கடற்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றி, இப்பகுதி மேம்பாடை வலியுறுத்தி, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பரிசீலித்த தமிழக சுற்றுலாத் துறை, மத்திய சுற்றுலாத் துறையிடம் இதுகுறித்து பரிந்துரைத்தது.
இதையடுத்து மத்திய அரசு, 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ், இப்பகுதி கடற்கரையில், 15 கோடி ரூபாய் மதிப்பில் பயணியர் பூங்கா, சுத்திகரிப்பு குடிநீர், நவீன கழிப்பறைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்த அனுமதித்தது.
பல்வேறு துறைகள் அனுமதி தொடர்பான நிர்வாக சிக்கல்களால், பின்னர் கைவிடப்பட்டது.
தற்போது மத்திய அரசு சார்பில், 30 கோடி ரூபாய் மதிப்பில், 'சுவதேஷ் தர்ஷன் 2.0' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி, காணொளி காட்சி வாயிலாக துவக்கினார்.
ஆனால், ஓராண்டு கடந்தும், இத்திட்டப் பணிகள் துவக்கப்படாமல், கிடப்பில் உள்ளன.
திட்டம் தாமதம் காரணமாக, கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் மேலும் மேலும் பெருகி, கடற்கரை மோசமாக சீரழிந்து வருகிறது.
மாமல்லபுரம் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்குள்ள கடற்கரையோ, மிக மோசமாக சீரழிக்கப்படுகிறது. அழகிய கடற்கரை பகுதி இருந்தும், கடைகள் ஆக்கிரமிப்பால் அலங்கோலமாக உள்ளது. தமிழக அரசு, கடற்கரையையும் முக்கிய இடமாக உணர்ந்து, நடைபாதை கடைக்காரர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடற்கரையை மேம்படுத்தி, இயற்கைச்சூழலுடன் பராமரிக்க வேண்டும்.
- சுற்றுலா ஆர்வலர்கள்.