/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதயம்பாக்கத்தில் மின்மாற்றி செயற்பொறியாளரிடம் மனு
/
உதயம்பாக்கத்தில் மின்மாற்றி செயற்பொறியாளரிடம் மனு
ADDED : மே 03, 2024 11:18 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் உள்ள உதயம்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி தெருக்களில், சிங்கிள் பேஸ் மின் இணைப்பு மட்டுமே உள்ளது. இதனால், மின் அழுத்த குறைபாடு ஏற்பட்டு, கோடை காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மின் விளக்குகளில் குறைவான வெளிச்சமே உள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்க முடியாத சூழல் உள்ளது.
அதுமட்டும் இன்றி, குடிநீர் மின் மோட்டார், விவசாய நிலங்களில் ஆழ்த்துளை கிணறு மின் மோட்டார்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சீரான மின்சாரம் வழங்க, புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என, செங்கல்பட்டு மின் வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மின்மாற்றி அமைக்கும் பணி துவங்கி, கிடப்பில் கிடக்கிறது.
இப்பணியை முழுமையாக முடித்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என கோரி, செங்கல்பட்டு செயற்பொறியாளரிடம், நேற்று கிராமவாசிகள் மனு அளித்தனர்.
இம்மனுவை பெற்றுக் கொண்ட செயற்பொறியாளர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.