/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாம்பு பிடிப்போர் சங்கத்திற்கு ரூ.2.37 கோடி லாபம்
/
பாம்பு பிடிப்போர் சங்கத்திற்கு ரூ.2.37 கோடி லாபம்
ADDED : ஜூலை 03, 2024 08:57 PM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், இருளர் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். வனப்பகுதியில் பாம்பு பிடிப்பது முக்கிய தொழில்.
அவர்களின் வாழ்வாதார மேம்பாடு கருதி, தமிழக தொழில் மற்றும் வணிகத்துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 1978 முதல் இயங்குகிறது. அதன் உறுப்பினர்கள், பாம்பு கடி விஷ முறிவு மருந்து தயாரிக்க, பாம்பிலிருந்து விஷம் எடுக்கின்றனர்.
அரசுத் துறையின் அலுவலர், சங்க செயலராக பொறுப்பு வகிக்கிறார். தலைவர், துணைத் தலைவர், ஐந்து உறுப்பினர்கள் என, நிர்வாக குழு உறுப்பினர்களும் உண்டு.
குழு தேர்தல் நடத்தப்படாமல், சில ஆண்டுகளாக செயலர் பொறுப்பில்இயங்குகிறது. நம் நாட்டில், அரசு அனுமதியுடன் முறையாக கூட்டுறவு சங்கமாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இருளர்கள் பிடித்து வரும் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டைஉள்ளிட்ட பாம்புகளிலிருந்து விஷத்தை பிரித்து எடுத்து, விஷ முறிவு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
ஆண்டிற்கு சராசரியாக 500 கிராம் விஷம் எடுத்து, 1.5 கோடி ரூபாய் வரை விற்று, அரசிற்கும் பங்களிப்பு தொகை அளிக்கிறது.
இச்சங்கம், கடந்த மூன்றாண்டுகளில், 1,807 கிராம் விஷம் எடுத்து, 5.43 கோடி ரூபாய்க்கு விற்று, 2.37 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டசபையில் அறிவித்துள்ளார்.