sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓ.எம்.ஆரில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

/

ஓ.எம்.ஆரில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஓ.எம்.ஆரில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஓ.எம்.ஆரில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


ADDED : ஜூலை 04, 2024 12:54 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை 42 கி.மீ., துாரம் உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, இச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலையில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள், பொறியியல் கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகள், தனியார் பள்ளிகள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் 110 விதியின் கீழ், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக பூஞ்சேரி வரை ஆறுவழிச் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, படூர் - தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் - ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்கும் பணிகள், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடந்து வருகின்றன.

அதேபோல், நெடுஞ்சாலைத்துறை, செங்கல்பட்டு உட்கோட்ட பராமரிப்பில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலை அகலப்படுத்தும் பணிகளும் மற்றொரு புறம் நடக்கின்றன. இப்பணிக்காக, 2011ம் ஆண்டு வருவாய்த் துறை வாயிலாக நில எடுப்பு செய்யப்பட்டது.

நில எடுப்பு செய்யப்பட்ட ஓ.எம்.ஆர்., சாலையில், சிறுசேரி, ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர், படூர், திருப்போரூர், ஆலத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

நெடுஞ்சாலைத்துறையினர் 1,075 கோடி ரூபாய் மதிப்பிலான 24.17 ஏக்கர் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, படிப்படியாக மீட்டுள்ளனர்.

தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இச்சாலையில், விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவற்றில், படூர் ரவுண்டானா அருகே, எதிர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் விடப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைத் துறையினர், 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், மேற்கண்ட பகுதிக்கு சென்று, 10க்கும் மேற்பட்ட வீடு, வணிக கடைகளை பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.

அப்போது, ஆக்கிரமிப்பு ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., படூர் ஊராட்சி தலைவர் தாராவின் கணவர் சுதாகர், வார்டு கவுன்சிலர் உட்பட எட்டு பேரை கைது செய்து, கேளம்பாக்கம் சமுதாய நலக் கூடத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர்.

இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, 30 கோடி ரூபாய் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வருவாய்த் துறைக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 சென்ட் தரிசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.

ஆக்கிரமிப்பு புகாரை தொடர்ந்து, வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, எச்சரிக்கை பலகை வைத்தனர்.

நல்லம்பாக்கத்திலும் அதிரடி


காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நல்லம்பாக்கம் ஊராட்சி பகுதியில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற துலுக்காணம் என்பவர், 25 சென்ட் அளவு நிலத்தை ஆக்கிரமித்து, அதில் 5 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை துவக்கினார்.அப்பகுதிவாசிகள் வண்டலுார் தாசில்தாருக்கு அளித்த புகாரின் பேரில், நேற்று முன்தினம், தாசில்தார் புஷ்பலதா தலைமையிலான வருவாய்த் துறையினர், கட்டுமானப் பணியை நிறுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டனர்.



தேசிய நெடுஞ்சாலையில் வரும் 8ல் நடவடிக்கை


சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சப்- - கலெக்டர் நாராயண சர்மா தலைமையில் குழு அமைத்து, கலெக்டர் அருண்ராஜ் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த குழுவினர், செங்கல்பட்டு முதல்- பல்லாவரம் வரை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், நடைபாதை கடைகள், வாகனங்கள் நிறுத்தம், ஆட்டோ நிறுத்தமிடங்களாக சர்வீஸ் சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது.அதனால், மகேந்திரா வேர்ல்டு சிட்டி முதல்- பொத்தேரி வரை, அணுகு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை, வரும் 8ம் தேதி அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.








      Dinamalar
      Follow us