/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுகோள்
/
சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுகோள்
சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுகோள்
சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுகோள்
ADDED : மார் 01, 2025 11:32 PM

மறைமலைநகர், செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் உள்ளது.
இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி திருக்கச்சூர், கொண்டமங்கலம், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னை, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பல்வேறு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர்.
அந்த வகையில், ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பெருமாள் கோவில் வந்து செல்கின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு பயணியர் செல்ல 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் மின் படிக்கட்டுகள் இல்லை.
இதனால் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் படிக்கட்டுகள் வாயிலாக, மிகுந்த சிரமத்துடன் கடக்கின்றனர். பலர், ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். இதனால், பயணியரின் சிரமத்தைப் போக்க, இங்கு நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:
சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில், மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக இருக்கும்.
மகேந்திரா சிட்டி, ஒரகடம் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்த பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்குச் செல்வோர் என, பலர் சென்று வருகின்றனர்.
விஷேச நாட்களில் இந்த ஊரில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்த தடத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன. இங்கு உள்ள 5 நடைமேடைகளில் படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன.
'எஸ்கலேட்டர்' எனும் நகரும் மின் படிக்கட்டுகள் இல்லாததால், ரயில் நிலையம் வரும் பயணியர், இரண்டாவது நடைமேடையில் உள்ள பயணச் சீட்டு மையத்திற்கு வந்து, பயணச் சீட்டு வாங்கிய பின், அவசர அவசரமாக ரயில் வரும் மற்ற நடைமேடைகளுக்கு மாறிச் செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலை பரனுார் முதல் பெருங்களத்துார் வரை உள்ள ஒன்பது ரயில் நிலையங்களிலும் உள்ளது.
இதனால், அடிக்கடி பலரும் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கும் போது, விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர், விரைவு ரயில் மோதி உயிரிழந்தார்.
இதுபோன்ற போன்ற சம்பவங்களை தடுக்க, இந்த ரயில் நிலையங்களில் நகரும் மின் படிக்கட்டுகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.