/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் நகராட்சிக்கு இரண்டாம் நிலை வகைப்பாடு
/
மாமல்லபுரம் நகராட்சிக்கு இரண்டாம் நிலை வகைப்பாடு
ADDED : ஆக 14, 2024 09:49 PM
மாமல்லபுரம்:தமிழகத்தில் உள்ள நகராட்சி நிர்வாகங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படுகின்றன. நகராட்சி நிர்வாகத்தின் ஆண்டு வருமானம் அடிப்படையில், அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சராசரி ஆண்டு வருமானம் 15 கோடி ரூபாய்க்கு மேல் சிறப்புநிலை எனவும், 9 - 15 கோடி ரூபாய் வரை தேர்வுநிலை எனவும், 6 - 9 கோடி ரூபாய் வரை முதல்நிலை எனவும், 6 கோடி ரூபாய்க்கு வரை இரண்டாம் நிலை எனவும், நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக பகுதியை, நகராட்சி நிர்வாக பகுதியாக தரம் உயர்த்த, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகத் துறை, இரண்டாம் நிலை நகராட்சி நிர்வாகப் பகுதியாக மாமல்லபுரத்தை வகைப்படுத்தியுள்ளது. நகராட்சி உருவாக்கத்திற்காக, முதல்வர் ஸ்டாலின் உத்தேச உத்தரவு பிறப்பித்து, அது அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகப் பகுதியில், மக்கள்தொகை 30,000 பேருக்கு மேல் வசிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு 19,500 பேர் தான் வசிக்கின்றனர்.
எனினும், மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள ஆண்டு சராசரி வருமானம், சுற்றுலா பகுதி மேம்பாட்டு முக்கியத்துவம் கருதி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் மக்கள் தொகைக்காக, அருகில் உள்ள ஊராட்சி பகுதிகள் மாமல்லபுரத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பேரூராட்சி நிர்வாகங்களும், இரண்டாம் நிலை நகராட்சி நிர்வாகமாக உயர்த்தப்பட்டுள்ளது.