/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
/
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஏப் 17, 2024 09:48 PM
சென்னை:முன்பகை காரணமாக, தன் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த நபரை கொல்ல முயன்ற வழக்கில், அந்நிறுவன உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
சென்னை, நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 30. இவர் நடத்தி வந்த வெற்றிவேல் முருகா நிதி நிறுவனத்தில், கார்மேகம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்ததாக, மாரிமுத்து அபாண்ட குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது.
கடந்த 2015 நவ., 20ம் தேதி, வீட்டில் இருந்த கார்மேகத்தை, தினசரி பணம் வசூலுக்கு மாரிமுத்து அழைத்துச் சென்றுள்ளார். கோயம்பேடு சந்தை அருகே சென்ற போது, 'பைக்' ஓட்டிய கார்மேகத்தை, மாரிமுத்து கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கார்மேகம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மறுநாள் மாரிமுத்துவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட 23வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.
போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.செந்தில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,''மாரிமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என தீர்ப்பளித்தார்.

