/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய காற்றாடிகள் அலைமோதிய பயணியர் கூட்டம்
/
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய காற்றாடிகள் அலைமோதிய பயணியர் கூட்டம்
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய காற்றாடிகள் அலைமோதிய பயணியர் கூட்டம்
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய காற்றாடிகள் அலைமோதிய பயணியர் கூட்டம்
ADDED : ஆக 19, 2024 12:07 AM

மாமல்லபுரம் : தமிழக சுற்றுலாத்துறை, மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நடத்தியது.
தற்போது, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், மூன்றாம் ஆண்டாக நடத்தியது. ஆக., 15ம் தேதி, சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் துவக்கினர்.
தினசரி பிற்பகல் 2:00 மணி முதல், மாலை வரை, காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன.
தங்கமீன்
இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மலேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 காற்றாடி கலைஞர்கள், 250க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிட்டனர்.
தமிழக வீர விளையாட்டை உணர்த்தும் ஜல்லிக்கட்டு காளை, பிரான்ஸ் நாட்டின் திமிங்கலம், தாய்லாந்து நாட்டின் டிராகன், ஜெர்மனி நாட்டின் ராஜநாகம், வியட்நாம் நாட்டின் தங்கமீன் மற்றும் மிக்கிமவுஸ் உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திர காற்றாடிகள், கண்கவர் வண்ணங்களில் பறந்தன.
இறுதி நாளான நேற்று, பயணியர் கூட்டம் அலைமோதியது.
மாலை 5:30 மணிக்கு பிறகும், கவுண்டர்களில், தலா 200 ரூபாய்க்கு டோக்கன் பெற முண்டிஅடித்தனர்.
இதுகுறித்து, மீடியா பாக்ஸ் நிறுவன உரிமையாளர் பெனடிக்ட் சாவியோ கூறியதாவது:
இதற்கு முன் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டது. மூன்றாம் ஆண்டாக, தற்போது 40 ஏக்கர் பரப்பில் நடத்தியுள்ளோம். 30,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு இருக்கலாம்.
தொடர் விடுமுறை
அடுத்தாண்டு விழாவில், கூடுதல் வெளிநாட்டினரை பங்கேற்க வைத்து, சர்வதேச கைட் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தி, பட்டம், பரிசு வழங்கவும் முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில்,பள்ளிகள் தொடர் விடுமுறையில் உள்ள சூழலில், மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்கள் காண பயணியர் குவிவர். காற்றாடி திருவிழா காரணமாக, குறைந்தளவு பயணியரே வந்திருந்தனர்.

