/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூரை இடிந்த சிறுதாவூர் அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று இடம் திருப்போரூர் எம்.எல்.ஏ., அறிக்கை
/
கூரை இடிந்த சிறுதாவூர் அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று இடம் திருப்போரூர் எம்.எல்.ஏ., அறிக்கை
கூரை இடிந்த சிறுதாவூர் அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று இடம் திருப்போரூர் எம்.எல்.ஏ., அறிக்கை
கூரை இடிந்த சிறுதாவூர் அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று இடம் திருப்போரூர் எம்.எல்.ஏ., அறிக்கை
ADDED : ஆக 09, 2024 10:40 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் உயர்நிலைப் பள்ளியில், வகுப்பறை கட்டட கூரை இடிந்து விழுந்து, 10ம் வகுப்பு மாணவியர் மூவர் தலையில் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவர்கள், வகுப்பறையை புறக்கணித்து, பள்ளியின் நுழைவாயிலிலேயே காத்திருந்தனர். இடைநிலை பருவ தேர்வு நடைபெற இருந்தது.
தகவல் அறிந்து வந்த ஊராட்சி தலைவர் அருள் மற்றும் பெற்றோர், மாணவர்களை அமர வைக்க, அருகில் தனியார் தற்காலிக இடத்தை தேர்ந்தெடுத்தனர்.
இதற்கிடையில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், திருப்போரூர் பி.டி.ஓ., வட்டார கல்வி அலுவலர்கள் விரைந்து வந்தனர். பின், மாணவர்களை மேற்கண்ட இடத்திற்கு அழைத்து சென்று அமர வைத்து, தேர்வு எழுதவும், வகுப்பு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூரை இடிந்தது தொடர்பாக, தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப் படவில்லை.
இதுதொடர்பாக, அனைத்துக்கட்சி தலைவர்களும் பள்ளிக்கட்டடங்களை சீரமைக்ககோரி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி அறிக்கை: சிறுதாவூர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேவையான இடத்தை, வருவாய்த் துறை தேர்ந்தெடுத்து தர தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
நடந்து முடிந்த 2024 - -25 நிதிநிலை அறிக்கை மானிய விவாத கோரிக்கையின் போது, இது குறித்து சட்டமன்றத்திலேயே இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினேன்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி, இந்த உயர்நிலைப் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை கூரை இடிந்து விழுந்து, மூன்று மாணவியர் காயமடைந்து உள்ளனர். அதில், ஒரு மாணவிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடும், அனைத்து மாணவர்களுக்கும் மனரீதியான மருத்துவ கலந்தாய்வும் செய்திட வேண்டும்.
கூரை இடிந்த கட்டடம், 2018ல் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.
பொதுவாக, அரசு கட்டடங்களின் குறைந்தபட்ச ஆயுள் 15 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், பயன்பாட்டு கால அளவின் பாதி அளவு காலத்திலேயே இக்கட்டடம் இடிந்துள்ளது.
இக்கட்டடம் உரிய காலமுறை பராமரிப்பிற்கு உட்படுத்தபடவில்லை என்பதும், கட்டடம் கட்டி முடித்த பின், ஒப்பந்ததாரரின் கட்டாய பராமரிப்பு காலத்தில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டதா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
எனவே, கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம், காவல் துறை, வருவாய்த் துறை விசாரணையோடு, தொழில்நுட்ப விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு, இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை கண்டறிய வேண்டும்.
தவறு இழைத்தது, ஒப்பந்ததாரர், உரிய மேற்பார்வை, தரக்கட்டுப்பாட்டிற்கு பொறுப்பேற்க வேண்டிய அலுவலர்கள் என, யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, வருவாய் துறையினர் இனியும் மெத்தனம் காட்டாமல், ஏதேனும் காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து, காலத்தை போக்காமல் உடனடியாக சிறுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இடம் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
கடந்த, 8ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவியர், ஒரு மாணவர் காயம் அடைந்துள்ளனர். பல முறை கட்டடங்கள் குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டடங்களை வைத்திருப்பதை சிறிதும் ஏற்று கொள்ள முடியாது. உடனே தமிழகம் முழுதும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும்.
கல்வி தரத்தை உயர்த்தும் மத்திய அரசின், 'பி.எம். ஸ்ரீ' திட்டத்தை தமிழகத்தில் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், கூரை பெயர்ந்துவிழுந்து மாணவியர் காயமடைந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதம், காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வகுப்பறை கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அதன்பின்னும், பள்ளிக் கல்வித்துறை காட்டும் அலட்சிய போக்கு தொடர்கிறது. தமிழக அரசு, மாணவர்களின் பாதுகாப்பில் இனியும் அலட்சியம் காட்டாமல், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.