/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேற்கு வங்க மாநிலத்தவர் மாமல்லையில் சுற்றுலா
/
மேற்கு வங்க மாநிலத்தவர் மாமல்லையில் சுற்றுலா
ADDED : செப் 03, 2024 04:54 AM
மாமல்லபுரம் : இந்தியாவில், தமிழகம் முக்கிய சுற்றுலா மாநிலமாக விளங்குகிறது. சைவ, வைணவ சமய கோவில்கள் நிறைந்த ஆன்மிக சிறப்பும் பெற்றுள்ளது. அவை சர்வதேச பயணியரை கவர்ந்து வருவதால், இங்கு, பிற மாநில பயணியர் சுற்றுலா வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய தென்னியந்திய பகுதிகளுக்கு தமிழகம், அருகில் உள்ள மாநிலம் என்பதால், குழுவினராக பேருந்திலேயே சுற்றுலா வருவது இயல்பு.
ஆனால், நாட்டின் வடகிழக்கில், நீண்டதொலைவில் உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநில பயணியர், நீண்டதொலைவில் உள்ள தமிழகத்திற்கு, ஒரே பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
குறைந்தபட்சம், 15 - 20 நாட்கள் சுற்றுலாவிற்கு திட்டமிட்டு, குழுவினராக வந்து, மாமல்லபுரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு, பேருந்தில் நேற்று சுற்றுலா வந்த பயணியர், மாமல்லபுரம் பல்லவர் கால கற்சிற்பங்களை வியந்து கண்டுகளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தமிழகம் வரும் வழியில் உள்ள மற்ற மாநில சுற்றுலா இடங்கள் காண, 20 நாட்கள் வரை, சுற்றுப் பயணம் செய்வோம். ஒரே பேருந்தில் தான், நீண்ட தொலைவு செல்கிறோம்.
நாங்களே உணவுப் பொருட்கள் கொண்டு வந்து, ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி சமைத்து உண்கிறோம். தேவைப்பட்டால் மட்டுமே விடுதியில் தங்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.