/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா தினத்தில் இலவச அனுமதி தொல்லியல் துறை பரிசீலிக்குமா?..
/
சுற்றுலா தினத்தில் இலவச அனுமதி தொல்லியல் துறை பரிசீலிக்குமா?..
சுற்றுலா தினத்தில் இலவச அனுமதி தொல்லியல் துறை பரிசீலிக்குமா?..
சுற்றுலா தினத்தில் இலவச அனுமதி தொல்லியல் துறை பரிசீலிக்குமா?..
ADDED : செப் 09, 2024 06:36 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்பங்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களில், சர்வதேச சுற்றுலா தினமான செப்., 27ம் தேதி, சுற்றுலா பயணியரை இலவசமாக அனுமதிக்க, தொல்லியல் துறை பரிசீலிக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பல நுாற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், உலக நாடுகளில் உள்ளன. அவை, ஒரு நாட்டின் பழங்கால கலாசாரம், கலை, பண்பாடு உள்ளிட்டவற்றை, வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்துகின்றன.
அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரியம் கருதி பாதுகாப்பது குறித்து, அந்தந்த நாடுகள், தற்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இதை முன்னிட்டு, சர்வதேச பாரம்பரிய தினமாக, ஏப்., 18ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், சர்வதேச பாரம்பரிய வாரமாக, நவ., 19 - 25ல் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது.
அத்துறை, ஆண்டுதோறும், ஏப்.,18, நவ.,19 மற்றும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆகிய தேதிகளில், சுற்றுலா பயணியர் பாரம்பரிய சின்னங்களை இலவசமாக காண அனுமதிக்கிறது.
பொதுமக்கள் சுற்றுலா விழிப்புணர்வு பெறவும், சுற்றுலா மேம்பாட்டிற்கும், செப்., 27ம் தேதி, சர்வதேச சுற்றுலா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், இந்நாளில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
சுற்றுலாவிற்கு என சிறப்புப்பெற்ற இந்த நாளிலும், தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது. இந்நாளின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு கருதி, பயணியரை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.