/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமையுமா? தாழம்பூர் எல்லையை பிரித்து உருவாக்க கோரிக்கை!
/
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமையுமா? தாழம்பூர் எல்லையை பிரித்து உருவாக்க கோரிக்கை!
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமையுமா? தாழம்பூர் எல்லையை பிரித்து உருவாக்க கோரிக்கை!
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமையுமா? தாழம்பூர் எல்லையை பிரித்து உருவாக்க கோரிக்கை!
ADDED : ஆக 11, 2024 02:16 AM
திருப்போரூர்:திருப்போரூர் காவல் நிலையம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1907ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின், 80 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே காவல் நிலையத்தின் கீழ், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன.
அதன்பின், கடந்த 1987ம் ஆண்டு, திருப்போரூரிலிருந்து பிரித்து, தாழம்பூர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில், நாவலுார், தாழம்பூர், காரணை, பொன்மார், மேலக்கோட்டையூர், கண்டிகை உள்ளிட்ட, 20 கிராமங்கள் உள்ளன.
தொடர்ந்து, 1997ம் ஆண்டு, திருப்போரூர் காவல் நிலையத்திலிருந்து, கேளம்பாக்கம், மானாம்பதி ஆகிய இரு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பின், 2015ம் ஆண்டில் காயார் காவல் நிலையம் உருவானது.
தற்போதுள்ள தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்களிலிருந்து, சில கிராமங்கள் பிரிக்கப்பட்டு, காயார் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டன.
இதில், மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில் இருந்த கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்கள், அண்மையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டன.
இந்த தாழம்பூர் காவல் நிலையம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலுாரில் அமைந்துள்ளது. ஆனால், வண்டலுார் சாலையில் உள்ள மாம்பாக்கம், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, ரத்தினமங்கலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், புகார் அளிக்க தாழம்பூர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு செல்ல வேண்டுமானால், கேளம்பாக்கம் சென்று, அங்கிருந்து தாழம்பூர் செல்ல வேண்டும். இதற்கு, இரண்டு பேருந்துகள் பிடித்து செல்வதுடன், கால விரயமும் ஆகிறது.
தற்போதுள்ள மேலக்கோட்டையூரில், விளையாட்டுப் பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய மனை பிரிவுகள், தொழிற்சாலைகள், தனியார் பொறியியல் கல்லுாரிகள், 3,000 காவலர் குடியிருப்புகள் உள்ளன.
இதை கருதி, தாழம்பூர் காவல் நிலையத்தின் எல்லைகளை மறு வரையறை செய்து, மேலக்கோட்டையூரில் புதிய காவல் நிலையத்தை ஏற்படுத்த, காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

