/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுங்குன்றம் கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டை வீணாகும் அபாயம்
/
சிறுங்குன்றம் கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டை வீணாகும் அபாயம்
சிறுங்குன்றம் கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டை வீணாகும் அபாயம்
சிறுங்குன்றம் கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டை வீணாகும் அபாயம்
ADDED : ஏப் 01, 2025 11:11 PM

திருப்போரூர்:சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வர தாமதம் ஆவதால், கொள்முதல் செய்த 2,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இவை, மழையில் நனைந்து வீணாகும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், சிறுங்குன்றம் மற்றும் சுற்று வட்டார 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சிறுங்குன்றத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து வேகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் லாரிகள் வாயிலாக, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், லாரிகள் வர தாமதம் ஆவதால், சிறுங்குன்றம் நெல் கொள்முதல் மையத்தில், 2,000 நெல் மூட்டைகள் கடந்த 7 நாட்களாக தேங்கிக் கிடக்கின்றன.
மேலும், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல்லையும், இந்த மையத்தில் குவித்து வைத்துள்ளனர்.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், புதிதாக விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யவும் ஊழியர்கள் தயங்குகின்றனர்.
நெல் மூட்டைகளை பாதுகாக்க, போதிய அளவு தார்ப்பாய்களும் வழங்கப்படவில்லை. தற்போது திடீரென மழை பெய்தால், அடுக்கி வைக்கப்பட்டுள்ள 2,000 நெல் மூட்டைகள் நனைந்து ஈரமாகி விடும்.
இதனால், நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கும், கொள்முதல் செய்த அரசுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை, உடனடியாக லாரிகள் வாயிலாக பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வசதியாக உள்ளது
சிறுங்குன்றத்தில் செயல்படும் நெல் கொள்முதல் மையம், விவசாயிகளுக்கு வசதியாக உள்ளது.
மையம் திறந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி வராததால், 2,000 மூட்டைகள் தேங்கியுள்ளன. திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நாசமாகி விடும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். யாருக்கும் பயனில்லாத நிலை ஏற்படும். எனவே, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் வாயிலாக ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுப்பது அவசியம்.
- சிறுங்குன்றம் விவசாயிகள்.

