/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல்லாவரம் ஏரியில் 5 டன் மருத்துவ கழிவு 2 பிரபல மருத்துவமனைகள் மீது புகார்
/
பல்லாவரம் ஏரியில் 5 டன் மருத்துவ கழிவு 2 பிரபல மருத்துவமனைகள் மீது புகார்
பல்லாவரம் ஏரியில் 5 டன் மருத்துவ கழிவு 2 பிரபல மருத்துவமனைகள் மீது புகார்
பல்லாவரம் ஏரியில் 5 டன் மருத்துவ கழிவு 2 பிரபல மருத்துவமனைகள் மீது புகார்
ADDED : செப் 25, 2024 12:26 AM

பல்லாவரம்:பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாலையின் இருபுறத்திலும், பல்லாவரம் ஏரிக்கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மண்ணை கொட்டி மேடாக்கும் பணி நடந்து வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் கால்வாய்களை துார்வாரும் பணியில் சேகரமாகும் கசடு மண்ணை, சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் கொட்டி, மேடாக்கி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குப்பை, இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை, மர்ம நபர்கள் இரவில் எடுத்து வந்து, இந்த ஏரிக்கரையோரம் கொட்டுவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில், மர்ம நபர்கள் நேற்று அதிகாலை, லாரிகளில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து ஏரி, ஏரிக்கரை மற்றும் காலி மனைகளில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர். காலையில் அவ்வழியாக சென்றவர்கள், அதிக அளவில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநகர நல அலுவலர் அருளானந்தம், இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள், மேற்கண்ட மூன்று இடங்களிலும் கொட்டப்பட்ட கழிவுகளை ஆய்வு செய்து, அவை மருத்துவ கழிவுகள் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, மருத்துவ கழிவுகளை கையாளும் தனியார் நிறுவனம் வாயிலாக, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில், லோடு லோடாக மருத்துவ கழிவுகளை கொட்டி நாசப்படுத்தியதாக, இரண்டு மருத்துவமனைகள் மீது, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்லாவரம் பெரிய ஏரியின் தெற்கு பகுதியில், பெரிய லாரிகளில் கொண்டுவந்து, குப்பையை கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அக்குப்பையை ஆய்வு செய்ததில், மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை மற்றும் பெருங்குடி ஜெம் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அந்த மருத்துவமனைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லாவரம் ஏரியின் ஒருபுறத்தில் கசடு மண், மறுபுறத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது குறித்து புகார் அளித்ததால், மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஏற்கனவே நாசமடைந்து விட்ட ஏரியை, மேலும் நாசப்படுத்தும் செயலில் இதுபோன்று ஈடுபடுகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்ட போது, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதுபோன்ற சம்பவங்களை வேடிக்கை பார்க்கக் கூடாது. ஏரியை பாழாக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
- வி.சந்தானம், 86,
சமூக ஆர்வலர், குரோம்பேட்டை.