/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு மீனவ கிராம பஞ்சாயத்தார் அடாவடி
/
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு மீனவ கிராம பஞ்சாயத்தார் அடாவடி
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு மீனவ கிராம பஞ்சாயத்தார் அடாவடி
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு மீனவ கிராம பஞ்சாயத்தார் அடாவடி
ADDED : செப் 21, 2024 02:00 AM

செங்கல்பட்டு:ஊராட்சி பெண் துணைத் தலைவர் உட்பட ஆறு குடும்பத்தினரை, மீனவ கிராம பஞ்சாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த, கிராம பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினியிடம், நேற்று மனு அளிக்கப்பட்டது.
மாமல்லபுரம் அடுத்த, கொக்கிலமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ராஜாத்தி, 40. எடையூர் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். அவர் மற்றும் ஆறு குடும்பத்தினர், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினியிடம் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கிராம மீனவர் பஞ்சாயத்து சபையினர், ராஜாத்தி மற்றும் ஆறு குடும்பத்தினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
இதுறித்து, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியரிடம், ஜூன் 13ம் தேதி மனு அளித்தோம். அதே மாதம் 15ம் தேதி, வட்டாட்சியர் தலைமையில், இருதரப்பினரிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின், அவர்கள் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, மீனவர் பஞ்சாயத்து சபையினர் வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுதி கொடுத்தனர். ஆனால், மீண்டும் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக, மீனவ பஞ்சாயத்து சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி, பாதிக்கப்பட்டவர்கள் சப்- - கலெக்டரிடம் மனு அளித்தனர். அதே மாதம் 16ம் தேதி, சப்- - கலெக்டர் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, அவர்கள் மீது உள்ள தடையை நீக்குவதாக, மீனவ பஞ்சாயத்து சபையினர் தெரிவித்தனர். தற்போது, மீனவர் பஞ்சாயத்தினர் ராஜாத்தி மற்றும் ஆறு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து, கடலுக்கு சென்று மீன்பிடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தெரிவித்தார்.