/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவித்தொகை வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை... இழுத்தடிப்பு!:மூன்று ஆண்டுகளாக 8,520 மாணவர்கள் பாதிப்பு
/
உதவித்தொகை வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை... இழுத்தடிப்பு!:மூன்று ஆண்டுகளாக 8,520 மாணவர்கள் பாதிப்பு
உதவித்தொகை வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை... இழுத்தடிப்பு!:மூன்று ஆண்டுகளாக 8,520 மாணவர்கள் பாதிப்பு
உதவித்தொகை வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை... இழுத்தடிப்பு!:மூன்று ஆண்டுகளாக 8,520 மாணவர்கள் பாதிப்பு
ADDED : நவ 14, 2024 01:43 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக, 8,520 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படவில்லை. வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு சரியில்லையென, கல்வி மற்றும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய கல்வி மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் 181, மேல்நிலைப் பள்ளிகள் 101 என, மொத்தம் 282 பள்ளிகள் உள்ளன.
இங்கு, 9, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிட மாணவர்களுக்கும், மத்திய அரசு 60 சதவீதமும், தமிழக அரசு 40 சதவீதமும் என, கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றன.
இக்கல்வி உதவித்தொகை திட்டம் 2016 - 17ம் கல்வியாண்டு முதல், தேசிய தகவல் மையம் வாயிலாக, இணையவழியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை பெற, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில், மாணவர்கள் பெயர்களில் வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.
இந்த பதிவுகளை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். இத்திட்டத்தில், 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு 3,500 ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கு 3,000 ரூபாயும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகை, மாணவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, 8,520 மாணவர்களுக்கு, இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இதனை பெற்றுத்தரும் நடவடிக்கையில், கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் வேடப்பள்ளி ராம்சுந்தர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து, கடந்த 7ம் தேதி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பலருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் இருப்பதை கண்டு, அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின், கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கி, அதற்கான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என, கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் உள்ள மாணவர்களின் ஆதார் இணைப்பு, வங்கி கணக்கு சரியில்லாததால், தொகையை அவர்களின் வங்கிக்கணக்கில் அனுப்பிவைக்க முடியவில்லை. விடுபட்ட மாணவர்களின் ஆதார் எண், வங்கி கணக்குகளை இணைத்து அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இப்பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்.
- கல்வித்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.