/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் மழையால் அனைத்து சாலைகளும்... நொறுங்கி போச்சு: 'கட்டிங், கரப்ஷன், கமிஷன்' காரணமென குற்றச்சாட்டு
/
செங்கை மாவட்டத்தில் மழையால் அனைத்து சாலைகளும்... நொறுங்கி போச்சு: 'கட்டிங், கரப்ஷன், கமிஷன்' காரணமென குற்றச்சாட்டு
செங்கை மாவட்டத்தில் மழையால் அனைத்து சாலைகளும்... நொறுங்கி போச்சு: 'கட்டிங், கரப்ஷன், கமிஷன்' காரணமென குற்றச்சாட்டு
செங்கை மாவட்டத்தில் மழையால் அனைத்து சாலைகளும்... நொறுங்கி போச்சு: 'கட்டிங், கரப்ஷன், கமிஷன்' காரணமென குற்றச்சாட்டு
ADDED : டிச 12, 2025 06:02 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையால் பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் சின்னாபின்னமாகி உள்ளன. 'கட்டிங், கரப்ஷன், கமிஷன்' முறையில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு தாலுகாக்கள் மற்றும் எட்டு ஒன்றியங்கள் உள்ளன.
இதில் ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், ஆறு பேரூராட்சிகள் மற்றும் 359 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் 40,000க்கும் மேற்பட்ட தெருக்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் உள்ளன.
தவிர, இ.சி.ஆர்., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்- - கேளம்பாக்கம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளும் உள்ளன.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், 'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையால், 70 சதவீத உட்புற சாலைகள் நொறுங்கி, நடப்பதற்கே லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளன.
குறிப்பாக புறநகர் பகுதிகளாக பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங் கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கங்களிலும், சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
திருப்போரூர் ஒன்றியத்தில் திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, ஆலத்துார் - சிறுதாவூர் சாலை, குன்னப்பட்டு - அருங்குன்றம் சாலை, தண்டரை - ஒரகடம் சாலை, போலச்சேரி - தாழம்பூர் சாலை, மைலை - மானாமதி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. இதே நிலையிலேயே, பெரும்பாலான சாலைகள் உள்ளன.
பள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல, இந்த பல்லாங்குழி சாலைகள் பெரும் சவாலாக உள்ளன.
உட்புற சாலைகளை அமைக்க ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவீதம் 'கமிஷன்', 'கரப்ஷன்', 'கலெக் ஷன்' என்ற முறையில், அரசி யல் புள்ளிகள் முதல் அதிகாரிகள் வரை செல்வதாலேயே, சாலைகள் உரிய தரமின்றி அமைக்கப்படுவதாக, பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், ஆண்டிற்கு பல நுாறு கோடி ரூபாய் வரை, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும், வெளியூர் வா கனங்கள் வேகமாக செல்லும் போது, திடீரென பள்ளம் நடுவே வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
அத்துடன், வாகனங்கள் சேதமடைந்து நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்கள், பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையிலுள்ள மின் விளக்குகள் எரியாததால், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
ஜி. எஸ்.டி., சாலையில் ஏற்கனவே இருந்த பள்ளங்கள், கடந்த செப்டம்பரில் சீரமைக்கப்பட்டன.
தற்போது, மழையின் காரணமாக அனைத்து பகுதிகளிலும், மீண்டும் சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், மழைக்கு சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
மக்கள் குழு
அமைக்க வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சாலை தரமாக அமைக்கப்பட்டு உள்ளதா என, பகுதி மக்களிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே, ஒப்பந்ததாரருக்கு உரிய நிதியை அளிக்க வேண்டும். ஆனால், இந்த ஒப்புதலை அதிகாரிகளே வழங்குகின்றனர். இதுவே, ஊழலுக்கு முதல் காரணம். அமைக்கப்படும் சாலைகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமாக, 20 ஆண்டுகளை நிர்ணயித்து, ஒப்பந்தங்களை வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட போதும், ஆறே மாதத்தில் பல்லிளிக்கும்படி சாலைகள் அமைக்க ஊழல், லஞ்சமே காரணமாக உள்ளன. மக்களின் வரிப்பணத்திலிருந்தே சாலைகள் அமைக்கப்படுகின்றன. எனவே, சாலை சரியில்லை என்றால், நுகர்வோர் கோர்ட்டுக்கு செல்லும்படி, மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஒதுக்கப்படும் நிதியில், தரமான முறையில் சாலை அமைக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, பொது மக்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

