/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.57 கோடி!:செங்கையில் 4,673 பயனாளிகளுக்கு பணி ஆணை
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.57 கோடி!:செங்கையில் 4,673 பயனாளிகளுக்கு பணி ஆணை
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.57 கோடி!:செங்கையில் 4,673 பயனாளிகளுக்கு பணி ஆணை
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.57 கோடி!:செங்கையில் 4,673 பயனாளிகளுக்கு பணி ஆணை
ADDED : செப் 19, 2024 11:52 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 4,673 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வீடுகள் கட்ட, 56.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் பணியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
மாவட்டத்தில், கிராமங்களில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கெடுக்கும் பணியில், ஊராட்சி செயலர், சுகாதார ஊக்குனர் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள், கணக்கெடுப்பு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன்பின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகள் கணக்கெடுப்பை சரிபார்த்து, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரிடம் அறிக்கை அளித்தனர். கணக்கெடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 57,498 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில், 47,245 பயனாளிகள் வீட்டுமனை பட்டா வைத்துள்ளனர். நத்தம் வகைப்பட்டில், 1,343 பேர் வீடு கட்டி வசித்து வருவது தெரியவந்தது.
இவர்கள் அனைவருக்கும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவதற்கு, கடந்த ஆண்டு, அரசுக்கு ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், 17,455 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 2024 - -25ம் ஆண்டிற்கு, 4,673 பயனானிகளுக்கு வீடுகள் கட்ட, 56.7 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
இத்திட்டத்தில், ஒரு வீடு கட்ட, 1.20 லட்சம் ரூபாய் மற்றும் துாய்மை பாரத இயக்க திட்டத்தில் கழிப்பறை கட்ட, 12,000 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 180 பயனாளிகளை இணையதளம் வழியாக, மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்பின், பயனாளிகளுக்கு பணி ஆணையை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்கினர்.
மற்ற பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆவணங்கள் வாங்கும் பணியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆவணங்கள் கிடைத்த பின், இணையதளத்தில் பதவியேற்றம் செய்து, வீடு கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 4,673 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது, வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை, பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம். வீடு கட்டும் பணியை, மூன்று மாதங்களில் முடித்து, பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.
- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.