/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர் காலி பணியிடம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
/
கிராம உதவியாளர் காலி பணியிடம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கிராம உதவியாளர் காலி பணியிடம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கிராம உதவியாளர் காலி பணியிடம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 06, 2025 11:33 PM
மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை, புதிய உச்ச வயது வரம்பு அடிப்படையில் நிரப்ப, இன்று முதல் விண்ணப்பம் பெறப்படுவதாக, தாலுகா நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், வண்டலுார், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
ஒவ்வொரு தாலுகாவிலும், பல வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாநிலம் முழுதும், மூன்றாண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களில் கிராம உதவியாளரை நியமிக்க, தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட தாலுகாக்களில் மதுராந்தகத்தில் 23, செய்யூரில் 9, வண்டலுாரில் 6, தாம்பரத்தில் 2, திருக்கழுக்குன்றத்தில் 1 என, மொத்தம் 41 காலி பணியிடங்களை நிரப்ப, மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
இதையடுத்து தாலுகா நிர்வாகங்கள், கடந்த ஜூலையில் விண்ணப்பங்கள் பெற்று, தகுதியானோருக்கு தேர்வும் நடத்தின.
இந்நிலையில் தமிழக அரசு, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயதை அனைத்து பிரிவினருக்கும் 2025 ஜூலை 1ம் தேதியன்று 21 என்றும், உச்ச வயது வரம்பை, இதர பிரிவினருக்கு 32, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஆகியோருக்கு, 39 வயது என்றும் நிர்ணயித்துள்ளது. மேலும் பட்டியல், பழங்குடி ஆகிய இனத்தவர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு, 42 வயது என, தமிழக அரசு மாற்றியுள்ளது.
எனவே, திருத்தி அமைக்கப்பட்ட உச்ச வயது வரம்பு அடிப்படையிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெற, அந்தந்த தாலுகா நிர்வாகங்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு விண்ணப்பதாரர், அந்தந்த தாலுகா பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்புத் தேர்வை, தமிழை ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதியவராகவும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தாசில்தாரிடம் நேரடியாக அல்லது தபால் வாயிலாக, இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கு முந்தைய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் விபரங்களை, https;//chengalpattu.nic.in/notice _category/recruitment/ என்ற இணைய முகவரியில் அறிந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.