/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊர் விலக்கப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் கொக்கிலமேடில் மீண்டும் அட்டகாசம்
/
ஊர் விலக்கப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் கொக்கிலமேடில் மீண்டும் அட்டகாசம்
ஊர் விலக்கப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் கொக்கிலமேடில் மீண்டும் அட்டகாசம்
ஊர் விலக்கப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் கொக்கிலமேடில் மீண்டும் அட்டகாசம்
ADDED : டிச 17, 2024 11:45 PM

மாமல்லபுரம்:கொக்கிலமேடில் ஊர் விலக்கப்பட்ட மீனவர்களை, அதே பகுதி மீனவர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர். சமாதானம் செய்ய முயன்ற மற்ற பகுதி மீனவர்களை, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேசன் மனைவி ராஜாத்தி. இவர், ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன், கழிவுநீர் கால்வாயை உயர்த்தி கட்டியது தொடர்பாக, மீனவர்கள் சிலர் ராஜாத்தியிடம் தகராறு செய்தனர்.
இதுகுறித்து ராஜாத்தி, மாமல்லபுரம் போலிசில் புகார் அளித்தார். பின், கொக்கிலமேடு மீனவ சபையினர் மிரட்டலால், புகாரை திரும்பப் பெற்றார்.
ஆனால், கட்டுப்பாட்டை மீறியதாக கூறி மீனவர் சபையினர், ராஜாத்தி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஏழு குடும்பத்தை ஊரிலிருந்து விலக்கி, கடலில் மீன்பிடிக்க கூடாது என, கட்டுப்பாடுகள் விதித்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, தாசில்தார் ராதா, கடந்த ஜூலை மாதம் பேச்சு நடத்தினார். இதையடுத்து, கட்டுப்பாடுகளை விலக்கியதாக, மீனவ சபையினர் அறிவித்தனர்.
ஆனால், தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தற்போது வரை நீடிப்பதாகவும், எதிர் தரப்பினர் தங்களை அடிக்கடி தாக்குவதாகவும், பாதிக்கப்பட்ட ஏழு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஊரிலிருந்து விலக்கப்பட்ட திருவேங்கடம், 36, அவரது மனைவி மஞ்சுமாதா, 30, உள்ளிட்ட பலரை வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மாமல்லபுரம், வெண்புருஷம், தேவனேரி, மரக்காணம் ஆகிய பகுதி மீனவர்கள், இவர்களை சமாதானப்படுத்த வந்துள்ளனர். அப்போது கொக்கிலமேடு மீனவர்கள், தங்கள் பிரச்னையில் தலையிடக் கூடாது என, எச்சரித்து அனுப்பி உள்ளனர். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் மிரட்டி விரட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக இரண்டு தரப்பு சார்பில், மாமல்லபுரம் போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக, பலரை பிடித்து விசாரிக்கின்றனர்.