/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கடலுார் மீனவர்கள் எதிர்பார்ப்பு
/
பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கடலுார் மீனவர்கள் எதிர்பார்ப்பு
பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கடலுார் மீனவர்கள் எதிர்பார்ப்பு
பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கடலுார் மீனவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 21, 2025 01:57 AM

கூவத்துார்: கடலுார் சின்னகுப்பம் பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்ட வேண்டுமென, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், சின்னகுப்பம் மீனவர் பகுதி அருகில் பாலாறும், பகிங்ஹாம் கால்வாயும் உள்ளன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஆற்று நீர் கால்வாயிலும் பெருக்கெடுத்து, ஆலிகுப்பம் மீனவர் பகுதி சிற்றாறில் கலக்கும்.
சின்னகுப்பம் மீனவர்கள், சாலையில் குறுக்கிடும் பகிங்ஹாம் கால்வாயை கடந்தே கடலுார், கூவத்துார், கல்பாக்கம் என, பிற பகுதிகளுக்கு, பல்வேறு தேவைகளுக்காக செல்கின்றனர்.
பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். ஷேர் ஆட்டோக்களும் இயங்குகின்றன. இச்சூழலில், கால்வாயில் பாலம் அவசியமாக தேவைப்படுகிறது.
ஆனால், இதுவரை பாலம் கட்டப்படவில்லை. கால்வாயை கடப்பதற்காக, சாலை குறுக்கிடும் இடத்தில், கால்வாய் முற்றிலும் துார்க்கப்பட்டு, மேற்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
கால்வாய் துார்ப்பு குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிட்ட நிலையில், லத்துார் வட்டார வளர்ச்சி நிர்வாகம், உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிட்டும், தற்போது வரை கிடப்பில் உள்ளது.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, கால்வாயில் ஆற்று நீர் செல்ல முடியாமல், சின்னகுப்பம் மீனவர் பகுதியில் சூழ்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
கால்வாயில் நீர் கடக்க வழியின்றி, தங்கள் பகுதியிலும், உய்யாலிக்குப்பத்திலும் வெள்ளம் சூழ்வதாக, மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, சின்னகுப்பம் கால்வாயில் பாலம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்குமாறு, மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.