ADDED : ஜூலை 16, 2025 01:27 AM

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி பகுதியில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
கருங்குழி பேரூராட்சி, எட்டாவது வார்டுக்கு உட்பட்ட முதலியார் தெரு பகுதி வழியாக, ரயில்வே கேட் சாலை செல்லும் சாலையோரம், குடிநீர் குழாய் உடைந்துள்ளது.
இதுகுறித்து, கருங்குழி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், காலை வேளையில் பேரூராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் போது, குடிநீர் குழாயில் இருந்து, தண்ணீர் வீணாக வெளியேறி, அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது.
எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.