/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளிநபர்களை வெளியேற்ற நடவடிக்கை
/
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளிநபர்களை வெளியேற்ற நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளிநபர்களை வெளியேற்ற நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளிநபர்களை வெளியேற்ற நடவடிக்கை
ADDED : ஏப் 17, 2024 10:57 PM

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. தொகுதிக்குள் தங்கியுள்ள வெளியூர் நபர்களை வெளியேற்றும் பணியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த ஆறு சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 80,263 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 1,427 பேர், இதர வாக்காளர்கள் 429 பேர் என, மொத்தம் 23 லட்சத்து 82,119 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில், 2,437 ஓட்டுச்சாவடிகளில், 337 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் மற்றும் பதிவு பெற்ற 11 அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 17 பேர் என, 31 போட்டியிடுகின்றனர்.
தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, கடந்த30ம் தேதி, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து பிரசாரத்தை துவக்கி, தாம்பரம் பகுதியில், நேற்று நிறைவு செய்தார்.
இவருக்கு ஆதரவாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், 30ம் தேதி பிரசாரத்தை துவக்கி, தாம்பரத்தில் நிறைவு செய்தார். இவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நடிகை விந்தியா ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இதேபோல், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், மங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பிரசாரத்தை துவக்கி, ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நிறைவு செய்தார்.
இவருக்கு ஆதரவாக, பா.ஜ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும், நேற்று மாலை 6:00 மணி வரை, அனல் பறக்கும் பிராசரத்துடன் நிறைவு செய்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் பெயர் அளவிற்கு மட்டுமே பிரசாரம் செய்தனர்.
இதுமட்டும் இன்றி, சுவர் விளம்பரம் அதிமாக இடம்பெறவில்லை. வேட்பாளர்களுக்கு ஆதரவாக போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டிருந்தன.
முக்கிய கட்சி வேட்பாளர்களுக்காக, சமூக வலைதளங்களில் அவர்களது கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அது தேர்தல் விதிமீறல் ஆதலால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கலெக்டரின் உத்தரவைத் தொடர்ந்து, வெளியூரைச் சேர்ந்த கட்சியினர், தொகுதியில் ஓட்டு இல்லாத நபர்கள் தொகுதியிலிருந்து வெளியேற அறிவுறுத்தியிருந்தார். விடுதி, திருமண மண்டபம் போன்ற இடங்களில், போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
சூறாவளி பிரசாரம் நேற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை இன்று மாலை அனுப்பி வைக்க உள்ளது.
சட்டசபை தொகுதிகளில் உள்ள கிடங்கில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்ல, சரக்கு வாகனங்கள் தயாராக உள்ளன.

