/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கிளீனருக்கு மாவுக்கட்டு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கிளீனருக்கு மாவுக்கட்டு
ADDED : மார் 07, 2025 01:22 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த 4ம் தேதி, சிறுமியின் உடலில் காயம் இருந்ததைக் கண்ட பெற்றோர், சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் ஆய்வில், சிறுமியிடம் யாரோ பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.
தொடர்ந்து, சிறுமி மேல் சிகிச்சைக்கு, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
விசாரணையில், சிறுமி படித்து வந்த பள்ளி வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வந்த, பாலுார் பகுதியைச் சேர்ந்த முருகன்,45, என்பவர், பள்ளி வாகனத்தில் வைத்து குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் முருகனை,'போக்சோ' சட்டத்தில் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
காவல் நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு நீதிமன்றம் அழைத்துச் செல்ல போலீஸ் வாகனத்தில் ஏற்றிய போது, முருகன் தப்ப முயன்றதில், கீழே விழுந்து அவரின் வலது கையில் முறிவு ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
முருகனை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.