/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகர் கோட்டத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்... குழப்பம்:உதவி பொறியாளர் அலுவலகம் மாறியதால் நுகர்வோர் தவிப்பு
/
மறைமலைநகர் கோட்டத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்... குழப்பம்:உதவி பொறியாளர் அலுவலகம் மாறியதால் நுகர்வோர் தவிப்பு
மறைமலைநகர் கோட்டத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்... குழப்பம்:உதவி பொறியாளர் அலுவலகம் மாறியதால் நுகர்வோர் தவிப்பு
மறைமலைநகர் கோட்டத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்... குழப்பம்:உதவி பொறியாளர் அலுவலகம் மாறியதால் நுகர்வோர் தவிப்பு
UPDATED : செப் 18, 2025 11:21 PM
ADDED : செப் 18, 2025 11:09 PM

மறைமலை நகர்:மறைமலை நகர் மின் கோட்டத்தில், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் மின் நுகர்வோர் குறைகளை உடனுக்குடன் தீர்க்க, ஒன்பது இடங்களில், புதிதாக உதவி பொறியாளர்கள் அலுவலகங்கள், கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டன. இந்த ஒன்பது உதவி பொறியாளர் அலுவலக எல்லைக்குள் பிரிக்கப்பட்ட மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.
![]() |
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஒன்றியங்களை உள்ளடக்கிய 89 ஊராட்சிகள் மற்றும் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளுக்கு, மின்வாரிய தலைமை அலுவலகமாக மறைமலை நகர் மின் கோட்டம் உள்ளது.
மறைமலை நகர் மின் கோட்டத்தின் கீழ் பொத்தேரி, மறைமலை நகர், படப்பை, ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம், மாம்பாக்கம், படூர், ஆலத்துார், திருப்போரூர், நெல்லிக்குப்பம், கண்ணகப்பட்டு ஆகிய இடங்களில், 110/11 கே.வி., துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தவிர, மறைமலை நகர் சிட்கோ, கூடுவாஞ்சேரி, காயரம்பேடு, தைலாவரம், கோவிந்தபுரம், நாவலுார், கேளம்பாக்கம், புதுப்பாக்கம் ஆகிய இடங்களில், 33/11 கே.வி., துணை மின் நிலையங்கள் உள்ளன.
நேரடி தொடர்பு தற்போது, பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் புதிதாக, 110/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மறைமலை நகர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மின் வினியோகம் தொடர்பாக மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள உதவி பொறியாளர்கள் அலுவலகம், 19 இடங்களில் செயல்பட்டு வந்தன.
![]() |
இதில் தையூர், மறைமலை நகர் சிட்கோ, பொத்தேரி, காயரம்பேடு, நெல்லிக்குப்பம், புதுப்பாக்கம், கோகுலாபுரம், மண்ணிவாக்கம், நாவலுார் ஆகிய ஒன்பது பகுதிகளில், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஒன்பது பகுதிகளிலும் தற்போது, 90,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
ஆனால், இப்பகுதியில் வசிப்போர், மின் வினியோகம் தொடர்பாக புகார் அளிக்க, தனியாக மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் இல்லை.
எனவே, இப்பகுதியைச் சேர்ந்த மின் நுகர்வோர், மின் வினியோகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க, அருகிலுள்ள உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது.
ஆனால், அங்குள்ள உதவி பொறியாளர்களுக்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால், அவர்களால் இந்த ஒன்பது பகுதிகளுக்குரிய மின் வினியோக பிரச்னைகளை தீர்ப்பதில் காலதாமதம் நிலவியது.
புதிய அலுவலகம் இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், மேற்கண்ட ஒன்பது இடங்களிலும், புதிதாக உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்க, கடந்த மே மாதம் முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் உதவி பொறியாளர் அலுவலகங்கள் செயல்பாட்டிற்கு வந்தன.
இதையடுத்து, புதிதாக செயல்பாட்டிற்கு வந்த ஒன்பது உதவி செயற்பொறியாளர்களின் எல்லைக்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த, அவர்களுக்கான 'செக் ஷன் கோடு' எனப்படும் பிரிவு குறியீட்டு எண் மாற்றப்பட்டது.
தவிப்பு ஆனால், பிரிவு குறியீட்டு எண் மாற்றப்பட்டது அறியாமல், மின் நுகர்வோர் பலர், பழைய குறியீட்டு எண்ணிலேயே,'ஆன்லைன்' மூலமாக மின் கட்டணம் செலுத்த முயன்றனர்.
ஆனால், அவர்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. குறியீட்டு எண் மாற்றப்பட்டதால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதால், செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறிதது, மின் நுகர்வோர் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக 'ஆன்லைன்' மூலமாகவே மின் கட்டணத்தை செலுத்தி வருகிறோம். இந்நிலையில், நடப்பு மாதம் 'ஆன்லைன்' மூலமாக மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என, மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போது, உதவி பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதால், குறியீட்டு எண் மாற்றப்பட்டுள்ளது.
எனவே, பழைய குறியீட்டு எண்ணிற்கு பதிலாக, புதிய குறியீட்டு எண்ணை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். தகவல் அளிக்காததால், குளறுபடி ஏற்பட்டுள்ளது.
@block_B@ குழப்பத்திற்கு காரணம்
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மறைமலை நகர் மின்கோட்டத்தில் உள்ள கேளம்பாக்கம், மறைமலை நகர் பகுதி - 2, காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மாம்பாக்கம், வண்டலுார், படப்பை ஆகிய எட்டு இடங்களில் செயல்படும் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்களின் கீழ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
மேற்கண்ட எட்டு பகுதிகளிலிருந்து, மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, கூடுதலாக ஒன்பது இடங்களில், உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கவும், தேவையான ஊழியர்களை நியமிக்கவும் தற்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கேளம்பாக்கத்திலிருந்து தையூர், மறைமலை நகர் பகுதி - 2லிருந்து சிட்கோ மற்றும் கோகுலாபுரம், காட்டாங்கொளத்துாரிலிருந்து பொத்தேரி. கூடுவாஞ்சேரியிலிருந்து காயரம்பேடு, திருப்போரூரிலிருந்து நெல்லிக்குப்பம், மாம்பாக்கத்திலிருந்து புதுப்பாக்கம், வண்டலுாரிலிருந்து மண்ணிவாக்கம், படப்பையிலிருந்து நாவலுார் ஆகிய ஒன்பது பகுதிகள் பிரிக்கப்பட்டு, அங்கு புதிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.
இந்த புதிய அலுவலகங்கள் கடந்த மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்ததால், மின் நுகர்வோர் புகார்களை எளிதில் கண்டறிய, ஒன்பது உதவி செயற்பொறியாளர் அதிகார எல்லைக்கு உட்பட்ட ஒன்பது இடங்களில் உள்ள மின் நுகர்வோரின் குறியீட்டு எண், நிர்வாக வசதிக்காக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் குறித்து, புதிய எல்லைக்குள் மாற்றப்பட்ட மின் நுகர்வோர் அனைவருக்கும் மொபைல் போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஆனால், வாடகை வீட்டில் வசிப்போரிடம், இந்த மாற்றம் குறித்த குறுஞ்செய்தி விபரத்தை, வீட்டின் உரிமையாளர்கள் கூறவில்லை. இதுவே குழப்பத்திற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.