/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்நிலை பள்ளிக்காக கடலுார் தவம் 25 ஆண்டாக நிறைவேறாத அவலம்
/
மேல்நிலை பள்ளிக்காக கடலுார் தவம் 25 ஆண்டாக நிறைவேறாத அவலம்
மேல்நிலை பள்ளிக்காக கடலுார் தவம் 25 ஆண்டாக நிறைவேறாத அவலம்
மேல்நிலை பள்ளிக்காக கடலுார் தவம் 25 ஆண்டாக நிறைவேறாத அவலம்
ADDED : பிப் 06, 2025 10:38 PM
கூவத்துார்:கடலுாரில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளே இல்லாததால், இப்பகுதியினர் நீண்ட துாரம் சென்று அவதிப்படுகின்றனர்.
கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில் கடலுார், வேப்பஞ்சேரி, சத்திரம்பேட்டை, சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவியர் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் ஏராளமானோர் படிக்கும் நிலையில், இங்கு அப்பள்ளிகளே இல்லை.
கடலுாரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேப்பஞ்சேரி மற்றும் பெரியகுப்பம் ஆகிய பகுதிகளில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவையே, தற்போது இயங்குகின்றன.
தொடக்க கல்வி பயின்றவர்கள், நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயில்வர்.
நடுநிலை பயின்றவர்கள் உயர்நிலை, மேல்நிலை ஆகிய வகுப்புகளை இங்கேயே தொடர, இங்கு அரசுப் பள்ளிகள் இல்லை. அதற்காக, நீண்ட துாரத்தில் உள்ள புதுப்பட்டினம், வாயலுார், கூவத்துார், அணைக்கட்டு என, பிற பகுதிகளுக்கே செல்ல வேண்டிய அவலம், நீண்ட காலமாக நீடிக்கிறது.
கடலுார் பள்ளிகளில் தொடக்க கல்வி பயின்றவர்கள், ஆறாம் வகுப்பு - பிளஸ் 2 வகுப்பு வரை, ஒரே அரசுப் பள்ளியில் படிக்க கருதி, இங்குள்ள நடுநிலைப் பள்ளியை தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
மேலும், இங்கிருந்து பேருந்து வசதியில்லாத காரணத்தால், புதுச்சேரி சாலையில் ஷேர் ஆட்டோவில், விபத்து அபாயத்துடன் சென்று திரும்புகின்றனர்.
கடந்த 1998ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் முதல் ஊராட்சியாக கடலுார் தேர்ந்தெடுக்கப்பட்டு, விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற அன்றைய அமைச்சர்கள், உயர்நிலைப் பள்ளி அமைப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், 25 ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு கல்லுாரியே உருவாக வேண்டிய சூழலில் உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளே உருவாகாத அவலமே, தற்போதும் நீடிக்கிறது.
மாணவர்கள் நலன் கருதி, முதலில் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், தொடர்ந்து மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்தவும், இப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

