/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெரும்பூரை பிரித்து புதுப்பட்டினம் குறுவட்டம் ஏற்படுத்த... எதிர்பார்ப்பு கல்பாக்கம் பகுதி வளர்ச்சியால் மக்கள் வலியுறுத்தல்
/
நெரும்பூரை பிரித்து புதுப்பட்டினம் குறுவட்டம் ஏற்படுத்த... எதிர்பார்ப்பு கல்பாக்கம் பகுதி வளர்ச்சியால் மக்கள் வலியுறுத்தல்
நெரும்பூரை பிரித்து புதுப்பட்டினம் குறுவட்டம் ஏற்படுத்த... எதிர்பார்ப்பு கல்பாக்கம் பகுதி வளர்ச்சியால் மக்கள் வலியுறுத்தல்
நெரும்பூரை பிரித்து புதுப்பட்டினம் குறுவட்டம் ஏற்படுத்த... எதிர்பார்ப்பு கல்பாக்கம் பகுதி வளர்ச்சியால் மக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 01, 2025 11:58 PM

மாமல்லபுரம்: கல்பாக்கம் பகுதி கிராமங்கள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நெரும்பூர் குறுவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதுப்பட்டினம் குறு வட்டம் ஏற்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் தாலுகாவில் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், நெரும்பூர், பொன்விளைந்தகளத்துார் ஆகிய குறுவட்டங்கள் உள்ளன.
இதில், அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரிய பகுதியானது நெரும்பூர் குறுவட்டத்திலும், அணுபுரம் நகரிய பகுதியானது மாமல்லபுரம் குறுவட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.
கல்பாக்கம் அணுசக்தி மையத்தை அணுசக்தி துறை உருவாக்கிய போது, அத்துறையினர் வசிப்பதற்காக புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கல்பாக்கம் நகரியம் ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, கல்பாக்கம் சுற்றுப்புற பகுதிகள், திருக்கழுக்குன்றம் குறுவட்டத்தில் இடம்பெற்றிருந்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், திருக்கழுக்குன்றம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, நெரும்பூர் குறுவட்டம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்திலிருந்தே முக்கிய இடமாக விளங்கிய சதுரங்கப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு குறுவட்டம் ஏற்படுத்த வருவாய்த்துறை முடிவெடுத்து, அரசியல் காரணங்களால் நெரும்பூர் குறுவட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கல்பாக்கம் நகரிய பகுதியானது நெரும்பூர் குறுவட்டத்தில் இடம்பெற்றது.
நாளடைவில் உருவான அணுபுரம் நகரிய பகுதியானது, மாமல்லபுரம் குறுவட்டத்தில் இணைக்கப்பட்டது.
அணுசக்தி துறை வேலை வாய்ப்புகள் காரணமாக கல்பாக்கம், அணுபுரம் சுற்றுப்புற பகுதிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. நெரும்பூர் குறுவட்டத்தில் வசிப்பவர்களில் கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதியினரே, பெரும்பான்மையாக உள்ளனர்.
இப்பகுதியில் மட்டும், 40,000 பேருக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். கல்பாக்கம் பகுதியில் இருந்து நெரும்பூர், 12 கி.மீ., தொலைவில் உள்ளது.
நெரும்பூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகமும், குறுகிய இடத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகிறது.
அணுசக்தி துறையினர், அரசு சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளுக்கு, நெரும்பூர் செல்ல வேண்டிய நிலையில், தொலைவு கருதி தரகர்களையே நாடுகின்றனர்.
புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதியினர், இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோவில் சென்று அவதிக்குள்ளாகின்றனர்.
இதனால், கல்பாக்கத்தை உள்ளடக்கி, புதுப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய குறுவட்டம் ஏற்படுத்த வேண்டுமென, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கல்பாக்கத்துடன் இணைந்ததாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி, நகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும் வாய்ப்புள்ளது. மக்களின் சிரமம் கருதி புதிதாக, புதுப்பட்டினம் குறுவட்டம் ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி, ஜமாபந்தியிலும் ஏற்கனவே மனு அளித்துள்ளோம்.
- கே.ராமசாமி,
உய்யாலிக்குப்பம், வாயலுார்.

