/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
6 மாதங்களாக ஊதியம் இல்லை தேர்தல் பணியாளர்கள் அவதி
/
6 மாதங்களாக ஊதியம் இல்லை தேர்தல் பணியாளர்கள் அவதி
ADDED : அக் 02, 2024 01:59 AM
தாம்பரம்:செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார் தாலுகாக்களில், தேர்தல் பிரிவில் தினக்கூலி அடிப்படையில், 26 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாள்தோறும், 708 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், புகைப்படம் மாற்றம், அடையாள அட்டை வழங்குதல், ஓட்டு எண்ணிக்கை, அதிகாரிகள் ஆய்வு மற்றும் விசாரணைக்கு செல்லும் போது, அவர்களுக்கு உதவியாக செல்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
சில ஆண்டுகளாக, இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, ஆறு மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடும்பத்தின் அன்றாட செலவு, பிள்ளைகளின் கல்விக் கட்டணம், வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு, தேர்தல் பிரிவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆறு மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.