/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ஏரி சீரமைப்பு 94 சதவீதம் நிறைவு தண்ணீர் தேக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
மதுராந்தகம் ஏரி சீரமைப்பு 94 சதவீதம் நிறைவு தண்ணீர் தேக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மதுராந்தகம் ஏரி சீரமைப்பு 94 சதவீதம் நிறைவு தண்ணீர் தேக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மதுராந்தகம் ஏரி சீரமைப்பு 94 சதவீதம் நிறைவு தண்ணீர் தேக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 17, 2025 12:05 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரியில், 94 சதவீத பணிகள் முடிந்து, விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி, 2,500 ஏக்கர். இதிலுள்ள ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
மேலும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மதுராந்தகம் ஏரியை துார் வாரி ஆழப்படுத்தவும், கலங்குகளில் கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி அமைக்கவும், 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக கூடுதலாக, 40 கோடி ரூபாய், கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மொத்தமாக, 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கிளியாறு மற்றும் நெல்வாய் ஆறு ஆகியவற்றிலிருந்து வரும் நீர், மதுராந்தகம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஏரியில் பணிகள் நடைபெற்று வந்ததால், ஏரிக்கு வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது.
தற்போது, கலங்குகள் அமைத்து, தானியங்கி 'ஷட்டர்'கள் அமைக்கும் பணி நடந்து வருவதால், ஏரியில் விவசாய பயன்பாட்டிற்காக, 40 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், விவசாய பயன்பாடு மற்றும் மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
தற்போது, முதல் போக சாகுபடி முடிந்து, இரண்டாவது போகம் சாகுபடிக்கு, பாசன மதகுகள் வழியாக, ஏரியிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியில் தானியங்கி 'ஷட்டர்'கள் பொருத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. ஏரியில் ஐந்து மதகுகள் முழுதும் சீரமைக்கப்பட்டு உள்ளன. விவசாய பயன்பாட்டிற்காக, தற்போது பாசன மதகுகள் வழியாக, இரண்டாவது போகம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக, ஏரியில் 94 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.இன்னும், மூன்று மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவுற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
- தர்முதுரைசாமி, உதவி செயற்பொறியாளர்
மதுராந்தகம் ஏரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் காரணமாக, தண்ணீர் தேக்க முடியாத சூழல் நிலவி வந்தது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தற்போது, பாசனத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. பாசன கால்வாய்களை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தாண்டு, 100 சதவீதம் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கே.குமார், ஏரி பாசன சங்க தலைவர், மதுராந்தகம்.