ADDED : நவ 14, 2026 09:53 PM
மதுராந்தகம்:
மதுராந்தகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில், மண் ஆய்வு செய்ய விவசாயிகளுக்கு ஆய்வக வேளாண் அலுவலர் தியாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் விபரம்:
மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 வகையான சத்துக்கள் இன்றியமையாதவை. பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்களும், நுண்ணுாட்ட சத்துக்களான இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீசு, கந்தகம் போன்றவையும் பயிர் வளர்ச்சிக்கு அவசியம்.
மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் அமில-கார நிலை, அங்க கரிமம், சுண்ணாம்பு நிலை மற்றும் பேரூட்ட, நுண்ணுாட்ட சத்துக்களின் நிலை என்ன என்பதையும் அறியமுடியும்.
அதன்படி, பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரமிடுதலை கடைப்பிடித்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டவும் மண்வளத்தை பாதுகாக்கலாம்.
இந்த ஆண்டு ‘எல்நினோ’ எனும் பருவநிலை தாக்கம் இருப்பதால், மழை பெறும் அளவு குறைய வாய்ப்புள்ளது.
எனவே. நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களான நெல், கரும்பு, வாழை போன்றவற்றை நீர் இருப்பின்படி திட்டமிட்டு பயிரிட வேண்டும்.
நீரின் அமில-கார நிலை அறிந்து பயிரில் நீர்மேலாண்மை செய்யவும் மண் ஆய்விற்கு விவசாயிகள் பங்கேற்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 99444 56220 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
