/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க விவசாயிகள் கோரிக்கை ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
/
ஏரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க விவசாயிகள் கோரிக்கை ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
ஏரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க விவசாயிகள் கோரிக்கை ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
ஏரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க விவசாயிகள் கோரிக்கை ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 23, 2025 01:43 AM

தாம்பரம்:வண்டலுார் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளிலும், கனிம வளத்தை வெட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் என, கோட்ட அளவிலான கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தாம்பரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில், கோட்டாட்சியர் முரளி தலைமையில், நேற்று காலை நடந்தது.
இக்கூட்டத்தில் நீர்வளத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, வட்டார வளர்ச்சி, மின் வாரியம், வனத்துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள்:
↓தாம்பரம் கோட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அத்துடன், கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால், ஆழ்துளை கிணற்று தண்ணீர், கழிவுநீராக மாறி வருகிறது. நீர்நிலைகளுக்குள் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அதன் கால்வாய்களை துார்வார வேண்டும்.
↓மேடவாக்கத்தில் கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என, பல முறை மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
↓வண்டலுார் மலையை சுற்றி, 8 ஏரிகள் உள்ளன. இவற்றின் நீராதாரம், அந்த மலை தான். மழை காலத்தில் மலையில் இருந்து வரும் தண்ணீர், ஏரிகளில் கலந்து, பின்பு தான் அடையாறு ஆற்றுக்கு செல்லும்.
தற்போது, ஆக்கிரமிப்புகளால் ஏரிகளுக்குள் செல்லாமல் நேரிடையாக பெருங்களத்துார் வழியாக ஆற்றுக்கு செல்கிறது. இதனால், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
↓நெடுஞ்சாலையில் உள்ள சிறுபாலங்களை துார் வாராததால், மழைநீர் திசைமாறி சாலையில் ஓடுகிறது. அதேபோல், விவசாய நிலங்களில் 'பிளாட்' போட்டு விற்போரால், மற்ற விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பாதிக்கப்படுகிறோம்.
↓திருநீர்மலையில் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் சாலை அமைத்துள்ளனர். இதனால், மற்ற விவசாயிகள் தங்களது நிலத்திற்கு செல்ல முடியவில்லை.
இப்பிரச்னை தொடர்பாக, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். சட்ட விரோதமாக செயல்பட்டவரின் குத்தகையை ரத்து செய்வதோடு, இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
↓கடந்த 2015ம் ஆண்டு, கவுரிவாக்கம் ஏரி உடைந்தது. அதை சீரமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த ஏரியில் கலக்கும் கழிவுநீர், அருகேயுள்ள 25 ஏக்கர் விவசாய நிலத்தில் தேங்கியுள்ளது. இதனால், 5 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை.
↓ஒத்திவாக்கம் ஏரியில் மண் எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஏரியில் மண் எடுக்கும் முயற்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். ஏரியை துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.
↓வண்டலுார் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளிலும், கனிம வளத்தை வெட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும். அந்த ஏரிகளை துார்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
முதல் கூட்டம் என்பதால், சில துறை அதிகாரிகள் வரவில்லை. அடுத்த கூட்டத்தில், விவசாயம் தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளும் அழைக்கப்படுவர். அப்போது தான், விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வசதியாக இருக்கும். திருநீர்மலையில் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, சாலை அமைத்த விவகாரத்தில், அந்த இடத்தில் மேற்கொண்டு பணி செய்யாமல் இருக்க, வருவாய் துறை சார்பில் வேலி போடப்பட்டுள்ளது. மேலும், குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- முரளி, தாம்பரம் கோட்டாட்சியர்.